புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: அக். 19: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலிலும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது வரும் 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (அக். 20) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையுமா, அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
அக். 18-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 10 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கோவை மாவட்டம் பில்லூர் அணையில் 9 செ.மீ., விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.