சென்னை: ஆகஸ்ட் 5-
தமிழக காவல் துறையின் தலைமை டிஜிபியான சங்கர் ஜிவால் ஆக. 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சீனியாரிட்டி அடிப்படையில் 1990-ல் தேர்வாகி தற்போது டிஜிபிக்களாக உள்ள தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால், 1992-ல் தேர்வான ஆவின் விஜிலன்ஸ் டிஜிபி ராஜீவ்குமார், அதே ஆண்டில் தேர்வான காவல் உயர் பயிற்சியக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் டிஜிபிக்களான அபய்குமார் சிங், வன்னியபெருமாள், மகேஷ்குமார் அகர்வால், வெங்கட்ராமன், வினித்தேவ் வான்கடே உள்ளனர்.
காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்னரே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பிவைக்கும். அதில், எந்த குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாத சீனியாரிட்டி மற்றும் தகுதியின் அடிப்படையில் முதல் 3 இடங்களில் உள்ளோரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பி வைக்கும். அதில், ஒருவரை தேர்வு செய்து தமிழக அரசு புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும்.
இதுதான் நடைமுறை.இந்நிலையில், ஆக. 31-ம் தேதியுடன் டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபியை தேர்வு செய்வதற்கான 8 பேர் பட்டியலை தமிழக அரசு இதுவரை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது














