புதிய தார் சாலையில் புற்கள் முளைத்த அவலம்


தருமபுரி,நவ.22-
தருமபுரி அருகே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள, தார்சாலையில் ஜல்லிக்கற்க்கள் பெயர்ந்து, அருகம்புல் முளைந்த அவல பணியை கண்டித்து, விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் உங்கரானஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏமாக்குட்டியூர் கிராமத்தில் இருந்து உங்கரானஅள்ளி கிராமம் வரை சுமார் ஒன்றறை கிலோ மீட்டர் தூரம் வரை பழதான சாலைக்கு, புதிய தார்சாலை அமைக்க அரசு ரூ.38 இலட்சத்து 37 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணியை ஒரு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தது.

சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் அரசு ஒதுக்கிய நிதியில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்சாலை தரமற்ற முறையில், அவசரகதியில் அமைக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்தும், அமைக்கப்பட்ட தார்சாலையில் அருகம்புல் முளைந்து கிடப்பதால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ள சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து உங்கரானஅள்ளி கிராம மக்கள் கூறும்போது: எங்கள் கிராமத்திற்கு பழுதான சாலையை சீரமைக்க கோரி, பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், தற்போது தான் அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ஏமக்குட்டியூர் கிராமத்திலிருந்து உங்கரானஅள்ளி கிராமம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரையில் புதிய தார் சாலை அமைக்க திட்டமிட்டு, பணியை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தது. சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உரிய முறையில் தார் சாலை அமைக்காமல், தரமற்ற முறையில் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதிய தார் சாலை ஆங்காங்கே ஜல்லி கற்கள் பெயர்ந்தும், சாலை முழுவதும் அருகம்புல் முளைந்தும் காட்சி தருவது அதிர்ச்சி அளிக்கிறது. இதனால் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் முதல், பாதசாரிகள் வரை செல்ல முடியாமல் தவித்து வரும் நிலையில், கீழே விழுந்து காயம் அடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள இச்சாலையை முறையாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட நிர்வாகத்தின் 1077 என்ற எண்ணிற்கும், சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தரப்பில் புகார் தெரிவித்தும் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எங்களது கோரிக்கை மீது உரிய கவனம் செலுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணியை கண்டித்தும், உரிய முறையில் அமைக்க வேண்டும் என விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என இவ்வாறு அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். தார்சாலை அமைக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் அருகம்புல் முளைத்தும், ஜல்லிகற்க்கள் பெயர்ந்து கிடக்கும் சம்பவம் கிராமமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடவடிக்கை எடுப்பார தர்மபுரி மாவட்ட ஆட்சியர்?