புதிய துணைவேந்தர் நியமனம்

சென்னை: டிச.8- தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக என்.பெலிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம்செய்வதற்காக கடந்த ஆகஸ்ட்மாதம் தேடல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் 3 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து, மீன்வளப் பல்கலை. துணைவேந்தராக என்.பெலிக்ஸ்-ஐ நியமனம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.
ஏறத்தாழ 32 ஆண்டுகள் கல்விஅனுபவம் பெற்றுள்ள பெலிக்ஸ்,தற்போது மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், செயல் துணைவேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
முட்டுக்காட்டில் உள்ள மீன்வளர்ப்பு அடைகாத்தல் மற்றும் தொழிற்பயிற்சி நிலைய இயக்குநர், சென்னை மீன்வளக் கழகத்தின் முதுநிலைப் படிப்புகளுக்கான முதல்வர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். பல்வேறு புத்தகங்களை எழுதியும், ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்தும் வெளியிட்டுள்ளார்.