புதிய பாராளுமன்ற கட்டிட விழாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் பங்கேற்பு

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், காங்கிரஸ் உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள், பதவியேற்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் திறப்பு விழாவில் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உறுதிப்படுத்தி உள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்று கூறிய அவர், ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு ஒய்ஆர்சிபி கலந்து கொள்ளும் என்றார். மேலும் இதுகுறித்து ஜெகன் மோகன் ரெட்டி தனது டுவிட்டர் பக்கத்தில், பிரமாண்டமான, கம்பீரமான மற்றும் விசாலமான பாராளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.