புதிய பிரதமர் யார்? நாடு முழுவதும் திக்.. திக்..நாளை வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி ஜூன் 3:
543 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்கான மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவை, அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகளே ஆர்வம் காட்டும் நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையுடன், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. சென்னையில் வட சென்னை தொகுதிக்கு ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை தொகுதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு லயோலா கல்லூரியிலும் உள்ள மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வடசென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் 39 வாக்கு எண்ணும் மையங்களில் ஒட்டுமொத்தமாக 234 அறைகளில் நடைபெறக்கூடிய இந்த வாக்கு எண்ணிக்கை பணிக்காக ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டிருக்கும். வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு மேஜையிலும் தனித்தனியாக வீடியோ பதிவு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கை பணிகளில் நுண்பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் உள்பட 38 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 2 பொதுப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுடன், ஆந்திரா, ஒடிசா மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும், வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், தேர்தல் நடைமுறையை சீர்குலைக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.