புதிய வகை கொரோனா வைரஸ்

அமெரிக்கா, ஆக. 19- டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு இயக்குனர் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை தாக்கி உள்ளது. இதில் 69 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை தாக்கி வருகிறது.கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது
இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், ‘கொரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது’ என கூறியுள்ளது.இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ள சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பேசிய இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இது தொடர்பாக கூறியதாவது:-சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை என்றாலும், உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடிக்கிறது.ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தி இருக்கிறது.