புதிய வரலாறு படைக்கும் தமிழ் புத்தகத் திருவிழா – ராம் பிரசாத் மனோகர் ஐஏஎஸ்

பெங்களூரு, டிச. 4: தமிழ்ப் புத்தகத்திருவிழா சரித்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் தமிழை 1 கோடி பேரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கர்நாடக சுற்றுலாத்துறை இயக்குநர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார். பெங்களூரில் நடைபெற்று வரும் 2 வது தமிழ்ப் புத்தக் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை திருவிழா சிறப்பு மலரை வெளியிட்டு அவர் பேசியது: தமிழ் மொழியை தன் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். அண்மையில் நான் ஜெர்மனிக்கு கொண்டு சென்றப்போது, அங்குள்ள தமிழர்கள் ஜெர்மனியை மொழியுடன் தமிழை இணைய வழி மூலம் சொல்லிக் கொடுப்பதை பார்க்க முடிந்தது. தமிழை தமிழர்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த தமிழ்ப் புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இதனை பெங்களூரில் மட்டுமின்றி கர்நாடக முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் தமிழ்க் கலாசாரம், பண்பாட்டை தமிழர்கள் மட்டுமின்றி அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் நிதி பற்றாக்குறை உள்ளது என்று கூறி, மாணவர்களுக்கு அளிக்கப்படும் பரிசுகளை நிறுத்திவிடலாம் என்று விழாக் குழுவினர் என்னிடம் கேட்டனர். மாணவர்கள் இந்த விழாவிற்கு முதுகெலும்பு. எனவே அவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு கடந்த ஆண்டைப் போல ரூ. 1 லட்சத்திற்கு பரிசளிக்கும் பொறுப்பினை நானே ஏற்றுக் கொண்டேன். காரணம் எனக்கு தமிழ் மீது உள்ள பற்றும், மாணவர்களிடத்தில் தமிழை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையும்தான் காரணம்.
இந்த சிறப்பு மலரை வெளியிடுவதில் நான் மற்றற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் புத்தகத்திருவிழா சரித்திரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதனை மறந்துவிடக்கூடாது.இதன் மூலம் ஒரு மாற்றம் வரும். அது தீபத்தைப் போல தொடர்ந்து எரித்து கொண்டே இருக்கும். இந்த விழாவிற்கு வந்துள்ள ஒவ்வொருவரும் தமிழ்ப் புத்தகத்திருவிழா நடைபெறுவதை குறைந்தபட்சம் 10 பேருக்காவது குறுஞ்செய்தியில் அனுப்பி, அவர்கள் இந்த விழாவிற்கு வரவழைக்க வேண்டும். இதனை இளம் பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையாக உணர்ந்து செய்ய வேண்டும். இந்தப் தமிழ்ப் புத்தகத்திருவிழா தொடர்ந்து வீருநடை போடும் என்பதில் சந்தேகமில்லை என்றார். நிகழ்ச்சியில் பெல்லாரி களப்பணிப் பிரிவு வனத்துறை வன பாதுகாவலர் முனைவர் எஸ். வெங்கடேசன், பெங்களூருத் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் வ‌.ஸ்ரீதரன், உரத்த சிந்தனை இதழியலாளர் துளசிபட், கன்னடர் தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக அறக்கட்டளையின் தலைவர் என். ராமசந்திரன், புலவர் கார்த்தியாயினி, முனைவர் தி.சரசுவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவில் முனைவர் எஸ்.வெங்கடேசன் எழுதி வாங்க பாஸ் வாழ்க்கையை கொண்டாடலாம் என்று புத்தகம் அனைவரும் வழங்கப்பட்டது.