புதிய வீடு கட்ட பணத்திற்காக சிறுவன் கடத்தி கொலை – மௌலவி கைது

தானே (மகாராஷ்டிரா), மார்ச் 26: புதிய வீடு கட்டுவதற்காக ரூ.23 லட்சம் வசூலிக்க 9 வயது சிறுவன் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மசூதியில் மாலை தொழுகை முடிந்து வெளியே வரும் போது துப்பாக்கி முனையில் சிறுவன் ஒருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக சல்மான் என்ற மௌலவியை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லப்பட்ட சிறுவன் இபாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் மார்ச் 24 ஆம் தேதி மாலை தானே பத்லாபூர் கோரேகான் கிராமத்தில் நடந்துள்ளது.
முக்கிய குற்றவாளியான சல்மான் மௌலவி புதிய வீடு கட்ட பணம் வசூலித்து வந்தார். இந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி அவரது குடும்ப உறுப்பினர்களிடம் பல லட்சம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் மாலை தொழுகைக்கு சென்ற சிறுவன், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. சிறுவனை குடும்பத்தினர் தீவிரமாக தேடி வந்த‌னர். இந்த நிலையில் இபாத்தின் தந்தை முதாசிருக்கு போன் செய்த சல்மான் மௌல்வி பணம் கேட்டுள்ளார். பணம் கொடுக்க முதாசீர் சம்மதிக்கவில்லை. பின்னர் சல்மான் மௌல்வி போனை கட் செய்துள்ளார்.இபாத் காணாமல் போனதை அறிந்த கிராம மக்கள் அனைவரும் தேட ஆரம்பித்தனர். மேலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நேரத்தில், குற்றம் சாட்டப்பட்ட சல்மான் மௌல்வி சிம் கார்டை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்றார்.நேற்று பிற்பகல் சல்மானின் வீட்டை போலீசார் கண்டுபிடித்தனர். சிறுவனை சாக்குப் பையில் அடைத்ததை அவர் ஒப்புக்கொண்டார். சிறுவன் சாக்கு மூட்டையில் இறந்து கிடந்தான்.கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக சல்மானுடன் அவரது சகோதரர் சபுவான் மௌலவியும் கைது செய்யப்பட்டுள்ளார். எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சல்மான் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார். இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தில் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பிற நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாக பத்லாபூர் மூத்த போலீஸ் அதிகாரி கோவிந்த் பாட்டீல் தெரிவித்தார்.