புதிய வெடிகுண்டு கருவிக்கு காப்புரிமை பெற்றார் ராணுவ மேஜர்

புதுடெல்லி:மார்ச் 21- எளிதில் எடுத்துக் செல்லக்கூடிய பல இலக்குகளை தகர்க்கும் புதிய வகை வெடிகுண்டு கருவியை (டபிள்யுஇடிசி) ராணுவத்தின் இன்ஜினியரிங் படைப் பிரிவில் பணியாற்றும் மேஜர் உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளார்.இந்திய ராணுவத்தில் ‘எக்ஸ் ப்ளோடர் டைனமோ கெபாசிடர் (இடிசி)’ என்ற குண்டுகளை வெடிக்க செய்யும் கருவி பயன்படுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் 400 மீட்டர் தூரம் உள்ள இலக்கை வயர்கள் மூலம் இணைக்கப்பட்ட குண்டு மூலம் தகர்க்க முடியும்.
ஆனால், ராணுவத்துக்கு அதிக தொலைவில் உள்ள இலக்கு களை தகர்க்க வயர்லெஸ் குண்டுகள் தேவைப்பட்டன. இதை உருவாக்கும் முயற்சியில் இந்திய ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவில் பணியாற்றும் மேஜர் ராஜ்பிரசாத் இறங்கினார். இவர் உருவாக்கியுள்ள டபிள்யுஇடிசி என்ற புதிய கருவி மூலம் 2.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு எதிரிகளின் பல இலக்குகளை வயர் மற்றும் வயர்லெஸ் குண்டுகள் மூலம், தனித்தனியாகவும் அல்லது ஒரே நேரத்திலும் தகர்க்க முடியும்.இந்த கருவி வெற்றிகரமாக செயல்படுவதால், இந்த டபிள்யுஇடிசி கருவியை உருவாக்கியதற்காக ராணுவ மேஜர் ராஜ்பிரசாத் காப்புரிமை பெற்றுள்ளார். இந்த கருவி தற்போது ராணுவத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.