புதுச்சேரியில் விஜய் பிரம்மாண்டமான கூட்டம்

சென்னை: நவம்பர் 26-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சார்பில், ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு புதுவை போலீசாரிடம் மனு அளித்துள்ளார்கள். டிசம்பர் 5 ஆம் தேதி ரோடு ஷோ செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளார். தவெக தலைவராக முதல் முறையாக புதுவை செல்லும் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந் தேதி நடந்த பிரசாரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் விஜய் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தார். சம்பவம் நடைபெற்று ஒரு மாதம் கழித்து அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி விஜய், மாமல்லபுரத்தில் கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பிறகு விஜய் தனது பிரசாரத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தாமல் இருந்தார். இதற்கிடையே கூட்ட நெரிசலை தவிர்க்க மக்கள் பாதுகாப்பு படை என்ற தொண்டர் படையை புதிதாக உருவாக்கினார். இவர்களுக்கு கூட்டநெரிசலை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த த.வெ.க. சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரி வளாக அரங்கத்தில் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விஜய் விரைவில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கும் என்று கூறினார். அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. இதில் உரிய உத்தரவுக்கு பிறகு விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்குவார் என்று கூறப்பட்ட நிலையில், புதுவையில் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி ரோடு ஷோ நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தவெக நிர்வாகிகள் புதுவை போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். காலாப்பட்டியில் தொடங்கி கன்னியாக்கோவில் வரை விஜய் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி சோனாம்பாளையத்தில் பொதுமக்கள் முன்பு உரையாற்றவும் விஜய் திட்டமிட்டுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல் முறையாக பொதுவெளியில் ரோடு ஷோவாக விஜய் திட்டமிட்டுள்ளார்.
சேலத்தில் அனுமதி கிடைக்காததால், தமிழ்நாட்டிற்கு வெளியே பொதுவெளியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்க திட்டமிட்டுள்ளார். காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை விஜய் பேச அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்தின் சொந்த ஊர் என்பதால் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்க தவெக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.