புதுவையை ‘தவிர்த்த’ தமிழிசை- காரணம் என்ன?

புதுடெல்லி, மார்ச் 19- மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக சார்பில் தமிழிசை போட்டியிட இருப்பதாக தகவல் பரவியது. அதற்கு அவர் நேரடியாக பதில் தராமல், சூசகமாக தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார்.
இதற்கிடையே, துணைநிலை ஆளுநராக தான் ஆற்றிய பணிகளை புத்தகமாக தயாரித்து, டெல்லி தலைமையை சந்தித்து தனது கோரிக்கையை முன்வைத்தார்.
இவ்வாறாக தமிழிசை காய்களை நகர்த்த, மாநில பாஜக தரப்பில் விவாதம் கிளம்பியது.
ஒரு கட்டத்தில் சட்டப்பேரவை கோப்புகளை ஆளுநர் தமிழிசை பல மாதங்கள் நிலுவையில் வைத்திருப்பதாக புதுச்சேரி பேரவைத்தலைவர் செல்வம் (பாஜக தரப்பில் தேர்வானவர்) குற்றம்சாட்ட, அது சர்ச்சையானது. இச்சூழலில், ‘வெளிமாநிலத்தவர் புதுச்சேரியில் போட்டியிட கூடாது’ என்ற எதிர்ப்பும் கிளம்பியது.
புதுச்சேரியின் சமூக நீதி பேரவைத்தலைவரான முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் சமூக அமைப்பினர் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹரிடம், ஏற்கெனவே உள்ள பிரெஞ்சு – இந்திய ஒப்பந்தத்தின்படி வெளி மாநிலத்தைச் சேர்ந்த யாரும் புதுச்சேரியில் போட்டியிடக் கூடாது என்று மனு ஒன்றை அளித்தனர். ஆனால், ஏற்கெனவே வெளி மாநிலத்தைச் சேர்ந்த மோகன் குமாரமங்கலம் போட்டியிட்டு எம்.பி.யானது மற்றும் பல வெளிமாநிலத்தவரும் போட்டியிட்டுள்ளதை தமிழிசைக்கு ஆதரவான கருத்தாக சிலர் முன்வைக்கின்றனர். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் பதவிகளை தமிழிசை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக தெலங்கானாவில் உள்ள தமிழிசையை கேட்டபோது, “நான் தீவிர அரசியலுக்கு மீண்டும் வருகிறேன். அதற்காகவே ராஜினாமா செய்தேன். மக்கள் பணிதான் எப்போதும் என் விருப்பம். மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்” என்றார்.