புனே கார் விபத்தில் சினிமாவை மிஞ்சும் திருப்பம் சிறுவனின் தாயும் கைது

புனே: ஜூன்.1-
புனே கார் விபத்தில் சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அரங்கேறி வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிபோதையில் காரை இயக்கிய பிரபல கட்டுமான தொழிலதிபரின் 17 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
தாய் கைது: சிறுவனை உடனடியாக அருகே இருந்தவர்கள் பிடித்த நிலையில், புனே போலீசார் சிறுவனை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் அந்த சிறுவனைக் காப்பாற்ற சினிமாவை மிஞ்சும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. ஏற்கனவே விபத்து தொடர்பாக அந்த 17 வயது சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரத்தில் அந்த சிறுவனின் தாயை புனே போலீசார் கைது செய்துள்ளனர். விபத்து நடந்தபோது சிறுவன் குடிபோதையில் இருந்ததை உறுதி செய்ய போலீசார் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை நடத்தி இருந்தனர். இருப்பினும், அந்த மருத்துவர்கள் 3 லட்சம் லஞ்சம் வாங்கிவிட்டு சிறுவனின் ரத்த மாதிரியைக் குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். அதற்குப் பதிலாகச் சிறுவனின் தாயின் ரத்த மாதிரியை அங்கு வைத்துள்ளனர். ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என்பதைக் காட்டவே இதைச் செய்துள்ளனர்.
எதற்காக கைது: இந்த விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு மருத்துவர்கள் மற்றும் ஒரு பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது சிறுவனின் தாயாரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றிய குற்றச்சாட்டில் தாயைக் கைது செய்துள்ளதாக போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்தார். பின்னணி என்ன: கடந்த மே 19ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் குடிபோதையில் காரை ஓட்டிய அந்த சிறுவன் மோதியதில் பைக்கில் இருந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 வயது சிறுவனுக்கு முதலில் ஜாமீன் வழங்கப்பட்ட போதிலும், சில நாட்களில் அது ரத்து செய்யப்பட்டது. இப்போது சிறுவன் கண்காணிப்பு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளான்.
இந்த விபத்தில் சினிமாவை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்குப் பல ட்விஸ்ட்கள் நடந்துள்ளன. முதலில் விபத்தை ஏற்படுத்தியதாகப் பழியை ஏற்றுக் கொள்ளும்படி டிரைவரை கேட்டுள்ளனர். இருப்பினும், அவர் மறுக்கவே டிரைவரை கடத்தி அழுத்தம் கொடுத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறுவனின் தந்தை மற்றும் தாத்தா கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் தான் இப்போது சிறுவனின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது: மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் தான் பிளஸ் 2 ரிசல்ட்கள் வெளியானது. இதைக் கொண்டாடும் வகையில் புனே சிறுவன் தனது நண்பர்களை அழைத்து பப்பில் ட்ரீட் கொடுத்துள்ளார். பிறகு மதுபோதையில் இருந்த அந்த சிறுவன் அதிவேகமாகக் காரை ஓட்டிய நிலையில், அது பைக் ஒன்றின் மீது மோதியுள்ளது. அதில் பைக்கில் வந்த தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.