புயலில் மிதக்கும் சென்னை

சென்னை நவம்பர்.4-
நிஜாம் புயல் கரையை கடப்பதற்கு முன்பதாகவே சென்னையை புரட்டி போட்டது. சென்னை நகரம் முழுவதும் வெள்ளகாடாக காட்சி தருகிறது. வீடுகளில் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளிலும் வெள்ளம் புகுந்தது. தாழ்வான பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள் வெள்ளத்தில் மிதந்து சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. எங்கெங்கும் வெள்ளம் என்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது
மிக்ஜாம் புயலால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடியிருப்புப் பகுதிகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல், இன்று (டிச.4) தமிழக வடகடலோர மாவட்டங்களை நெருங்கிச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 110 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை புயல் மேலும் தீவிரமடைந்து தெற்கு ஆந்திராவின் நெல்லூர் – மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கிறது.
புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரிக்கு காற்று மற்றும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு முதலே இடைவிடாத கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் சென்னையின் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் தரைத் தளங்களில் வசிப்போர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 11 மணியில் இருந்து மாலை 4 மணி வரை மழை பாதிப்பு அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகமிக அவசியமான சூழல் இன்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை பெருங்குடியில் அதிகபட்சமாக 29 செ.மீ மழை பதிவாகியுள்ளது. ஜிஎஸ்டி சாலை நீரில் மூழ்கியுள்ளது. ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பரவலாக மின் தடை ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகரைப் பொருத்துவரை பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலை மூடப்பட்டுள்ளது. நகருக்குள்ளும் பெரும்பாலும் பல பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் சிலர் ஊடகப் பேட்டிகளில் 2015 மழை வெள்ளம் திரும்பிவிட்டதுபோல் உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் விளக்கம்: இதற்கிடையில் தமிழக வருவாய்த் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சென்னை எழிலகத்தில் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொலைக்காட்சிக்கு அளித்தப் பேட்டியில், “இடைவிடாமல் பெய்யும் கனமழையால் நகரில் பரவலாக மழைநீர் தேங்கியுள்ளதாகப் புகார்கள் வருகின்றன. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், கனமழை தொடர்ந்து கொண்டிருப்பதால் உடனடியாக தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியாது. மழை நின்றவுடன் தண்ணீரை வெளியேற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளர்கள் தொடங்குவார்கள்.
விமான சேவைகள் முடக்கம்: கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னைக்கு வர வேண்டிய 16 விமானங்கள் பிற பகுதிகளுக்கு திருப்பிவிடப்பட்டன. விமான நிலைய ஓடுபாதையில் 2 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
விமான நிலைய ஓடுபாதை பகுதியில் இருந்து மழைநீர் வெளியேறும் கால்வாயை தொடர்ந்துகண்காணித்து நீர் தேங்காதபடிவெளியேற்ற கூடுதல் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தேவையிருந்தால் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள்விமானங்களை புயல் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக பெங்களூர், ஹைதராபாத், திருச்சி, கோவை, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு கொண்டு சென்று நிறுத்திக் கொள்ளலாம்.
சென்னை விமான நிலையத்தில் தங்கியுள்ள பயணிகள், விமானநிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள் உட்பட சென்னை விமான நிலையத்தை சார்ந்துள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தேவையான உணவு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மின்தடைகள் ஏற்பட்டால், அவசர தேவைக்கு தேவையான, ஜெனரேட்டர்கள், இன்வெர்ட்டர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 11 ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வியாசர்பாடி – பேசின் பிரிட்ஜ் இடையேயான 14ஆம் எண் பாலத்தில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டிப் பாய்வதால் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் எண் 12007 மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ், 12675 கோவை எக்ஸ்பிரஸ், 12243 கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ், 22625 கேஎஸ்ஆர் பெங்களூரு ஏசி டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ், 12639 பெங்களூரு பிரிந்தாவன் எக்ஸ்பிரஸ், 16057 – திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியன ரத்து செய்யப்பட்டுள்ளன.