புயல்கள் மேகவெடிப்பு மழை இருக்கும்- வானிலை மையம்

சென்னை: அக்.11-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். அது போல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு பருவமழை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி இந்திய பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதே சமயம் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்று வீசி வருகிறது.
இது கிழக்கு- வடகிழக்கு திசை காற்றாக மாறும்போது தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தில்தான் தொடங்கி உள்ளது. இரு ஆண்டுகளை தவிர, மற்ற ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகம் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை வடமாவட்டங்களில் இயல்பாகவும் இயல்பைவிட அதிகமாகவும் பதிவாகும். தென்மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் இருக்கும். வழக்கமாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதம் என 92 நாட்களில் வடகிழக்கு பருவமழை 44 செ.மீ. பதிவாகும். நடப்பாண்டு 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிகளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் சின்னங்கள் உருவாகியுள்ளன.
அது போல் இந்த ஆண்டும் புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்புள்ளது. எத்தனை புயல் உருவாகும், எங்கே உருவாகும், தீபாவளி அன்று மழை இருக்குமா என இப்போதே கணிக்க முடியாது. தாழ்வு மண்டலம், புயல் சின்னம் உருவாகும் போது 20 செ.மீ. மழை வரை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை நாட்டின் குடிமக்களாக நாம் எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலங்களில் டெல்டா மாவட்டங்களில் மழைப் பொழிவு காணப்படும். வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.