புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை

சென்னை: டிசம்பர். 11 – மிக்ஜாம் புயல் பாதிப்பை மதிப்பிட்டு, மத்திய அரசு நிவாரணத்துக்கு பரிந்துரைக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று மாலை சென்னை வருகிறது. கடந்த டிச.4-ம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வரலாறு காணாத வெள்ளத்தால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தற்போது ஒருசில இடங்கள் தவிர மற்ற பகுதிகளில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், புயல் பாதிப்புக்கான இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடியை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.
இந்நிலையில், புயல் பாதிப்பை கடந்த வியாழக்கிழமை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட்டு, முதல்வரிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, மத்திய குழுவை அனுப்பும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார். இ்ந்நிலையில், தமிழகத்துக்கு மத்திய குழுவை அனுப்புவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் இதர துறைகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், மிக்ஜாம் புயல் பாதிப்பை கண்டறிய மத்திய குழுவை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு புயல் சேதம் குறித்த இறுதி அறிக்கை அளித்ததும், மத்திய குழு பாதிப்பு குறித்த விரிவான மதிப்பீட்டை தயாரிக்கும். புயல் மிகக் கடுமையானதாக கருதப்பட வேண்டியதா என்பதை மத்திய குழு முடிவெடுத்து பரிந்துரைக்கும்.
இதற்காக அமைக்கப்படும் குழுவுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமை வகிப்பார். மத்திய அரசின் வேளாண்துறை, நிதித்துறை, மின்சாரம், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் இடம்பெறுவர். எனவே சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், இக்குழுவில் இடம்பெறும் பிரதிநிதிகள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தீவிர தன்மையை உணர்ந்து டிச.11-ம் தேதி மாலை முதல் புயல் பாதிப்புகளை மதிப்பிடும் பணியை தொடங்க வேண்டும். டெல்லி திரும்பிய பிறகு ஒரு வாரத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மத்திய குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துதர வேண்டும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று மாலை மத்தியக் குழுவினர் வர உள்ளதாகவும், நாளை, நாளை மறுதினம் என இரு தினங்கள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். அதேநேரம், மத்திய குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் விவரம், அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.