புறக்கணிக்கப்படும் ஏழைகள்;வளம் பெறும் தொழிலதிபர்கள்” – ராகுல்

புதுடெல்லி, பிப். 13: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ நியாய் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சத்தீஸ்கர் மாநிலம் கொர்பா நகரில் நேற்று யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினரின் பங்கு 74 சதவீதமாக உள்ளது. ஆனால், நாட்டின் 200 முன்னணி நிறுவனங்களின் உரிமையாளராகவோ அல்லது உயர்மட்ட நிர்வாகக் குழுவிலோ இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லை.
பெரிய மருத்துவமனைகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் உயர் பதவியில் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவில்லை. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்தியாவை இந்துநாடாக மாற்ற பாஜக முயற்சிக்கிறது. ஆனால், நாட்டு மக்களில் 74 சதவீதம் பேருக்கும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழைகளுக்கும் எதுவுமே கிடைக்கவில்லை.
அவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் வளங்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்காக திருப்பி விடப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் ஏழைகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளை பார்க்க முடியவில்லை.ஆனால் அம்பானி, அமிதாப் பச்சன், அதானி உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை பார்க்க முடிந்தது. அதானி, அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் நாட்டு மக்களின் நலனை விலையாக கொடுத்து சீன பொருட்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். இது பொருளாதார அநீதி ஆகும்.ராகுல் காந்தியின் பேச்சு ஏன் ஊடகங்களில் வெளியாவதில்லை என நீங்கள் கேட்கலாம். மோடி, அம்பானி, அதானி மற்றும் ராம்தேவ் உள்ளிட்டோரை ஊடகங்களில் பார்க்க முடியும். ஆனால், நாட்டில் உள்ள பிரச்சினைகளை பேசுவதால் ராகுலை பார்க்க முடியாது. நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.