புலனாய்வுத் துறைகள் மூலம் காங்கிரஸ் வெற்றியை தடுக்க பிஜேபி முயற்சி – கார்கே

வைகுந்த்பூர்: நவ.10
காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கதுறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகியவற்றை பாஜ பயன்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார்.
சட்டீஸ்கர் மாநிலம், வைகுந்த்பூர் சட்டமன்ற தொகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில்,‘ காங்கிரஸ் ஏழைகளுக்காக பாடுபடுகிறது. அதானி மற்றும் பணக்காரர்களுக்காக பாஜ பாடுபடுகிறது. காங்கிரசை கண்டு மோடி அஞ்சுகிறார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை பாஜ பயன்படுத்துகிறது’’ என்றார்.
ஜனநாயகத்துக்கு ஆபத்து: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூரில் அளித்த பேட்டியில்,‘‘மாநிலத்தில் அடுத்து அமையும் அரசை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால்,சிபிஐ,ஈடி,ஐடி என சுருக்க பெயர்களுக்கு பின்னால் ஒளிந்துள்ள ஒரு சிலர் மட்டுமே அடுத்து அமைய உள்ள அரசை தீர்மானிக்கின்றனர். முகம் தெரியாத நபர்களை வைத்து தேர்தல் வெற்றியை தீர்மானிப்பது என்பது நாட்டின் வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒன்றாகும். ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்துகிற முயற்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.