புலி தாக்கி கிராமப் பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் பலி

மைசூர்,நவ.7 –
கர்நாடக மாநிலத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது விவசாயி மீது புலி தாக்குதல் நடத்தி கொன்று தின்றுள்ள சம்பவம் சரகூறு தாலூகாவின் மொலியூரு வனப்பகுதியில் நடந்துள்ளது . இந்த தாலூகாவின் பி . மடகெரே கிராம பஞ்சாயத்து பகுதியின் காடபேகூரு கிராமத்தை சேர்ந்த விவசாயி மற்றும் கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினர் பாலாஜி நாயகா (42) என்பவர் புலிதாக்கி உயிரிழந்தவர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். பாலாஜி நாயகா வழக்கம்போல் நேற்று பண்டீபுரா புலிகள் காப்பக பகுதியில் உள்ள மொலியூரு வளைய வனப்பகுதியில் உள்ள பி மடகெரே – ஹோசகோட்டே மார்க்கத்தின் பக்கத்தில் உள்ள தன்னுடைய நிலத்தில் கால்நடைகளை மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது உணவு தேடி காட்டிலிருந்து ஊர் பக்கம் வந்த புலி ஒன்று மாடுகள் மீது பாய முயன்றுள்ளது . இதனால் அதிர்ச்சியடைந்த மாடுகள் சிதறி ஓடியுள்ளன . இப்படி மாடுகள் தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில் அருகில் மாடு மேய்த்தபடி உட்கார்ந்திருந்த விவசாயி பாலாஜி நாயகா மீது புலி தாக்குதல் நடத்தியதில் அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். பின்னர் இவருடைய உடலை புலி காட்டு பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது. இந்த காட்சிகளை பக்கத்து நிலத்தில் மாடு மேய்த்துஓடிருந்த ஒருவர் பார்த்து கதறியுள்ளார். உடனே அக்கம்பக்கத்து நிலங்களில் வேலை செய்துகொண்டிருந்த விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து பாலாஜியை காப்பாற்ற முயற்சிப்பதற்குள்ளாக புலி பாலாஜியின் இடது கால் , மார்பு மற்றும் தலை பகுதியை தின்றுள்ளது. விவசாயியை புலி தாக்கி கொன்று தின்றுள்ள சம்பவம் நடந்த இடத்திலிருந்து மொலியூர் வன அலுவலகம் அருகிலேயே இருந்தும் எந்த வன துறை அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லை என ஆத்திரமடைந்த கிராம மக்கள் வன துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் கூவி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தவிர அதிகாரிகள் வரும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் என அடம் பிடிக்கவே உடனே விரைந்து வந்த அதிகாரிகள் கிராமத்தாரை சமாதானம் செய்து மேற்கொண்டு நடவடிக்கை எதுத்து வருகின்றனர்