புழுங்கல் அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரி

புதுடெல்லி, ஆக. 27-
நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும், ஒட்டுமொத்த பணவீக்கம் குறையவும், புழுங்கள் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதித்து ஒரு வாரத்தில், தற்போது புழுங்கல் அரிசிக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
பாஸ்மதி அரிசிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலை டன் ஒன்றுக்கு 1,200 அமெரிக்க டாலர் அல்லது ரூ.99,000 ஆக நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஓராண்டில் அரிசியின் சில்லறை விலையில் சிறிதளவு அதிகரிப்பு இருந்த போதிலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் போக்குவரத்து மற்றும் உள்நாட்டுச் சந்தையில் குறுகிய கால அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டவை என்று வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, உடைந்த அரிசி மற்றும் பாசுமதி அல்லாத அரிசி மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. பருவமழை மற்றும் எல் நினோ புயல் அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டில் உற்பத்தி குறைந்ததால், இந்த ஆண்டு நெல் விளைச்சல் குறைந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் வெள்ளம், கிழக்கு மாநிலங்களில் தாமதமான விதைப்பு மற்றும் கர்நாடகாவில் குறைந்த மழை ஆகியவை கோடைகால பயிர்களை பாதிக்கலாம் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரிசிக்கான ஏற்றுமதி வரி அக்டோபர் 15ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதற்குள் எதிர்பார்க்கப்படும் அரிசி உற்பத்தி குறித்து மத்திய அரசு உரிய முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் மக்கள் மீதான “விலைவாசி உயர்வின் சுமையை” குறைக்க கூடுதல் நடவடிக்கை எடுப்பதாக கூறிய சில வாரங்களில் வெங்காயம் மற்றும் அரிசி மீதான ஏற்றுமதி வரி உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.