பூங்கா நகர் பெங்களூரில் மாசடைந்த காற்று

பெங்களூரு, செப். 13: கடந்த 3 ஆண்டுகளில் ஆகஸ்டு மாதத்தில் நல்ல காற்றின் தரம் இருந்த நிலையில் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் காற்றின் தரம் 38% குறைந்துள்ளது. கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரக் குறியீடு தரவுகளின்படி, பெங்களூரில் பெரும்பாலான காற்றின் தரக் குறியீடு கண்காணிப்பு இடங்களில் பெரும்பாலான நாட்களில் நல்ல காற்றின் தரம் குறைந்து, மாசடைந்த காற்று இருந்ததாக தரவுகள் தெரிவிக்கின்றன.
சராசரியாக, ஆகஸ்ட் 2021 இல் பெங்களூரில் 21 நாட்கள் நல்ல காற்றின் தர நாட்களைப் பதிவு செய்திருந்தாலும், ஆகஸ்ட் 2022 இல் இது 18 நாட்களாக குறைந்துள்ளது. நிகழாண்டு, சராசரியாக நல்ல காற்றின் தரம் 13 நாட்களாக‌ சரிந்துள்ளது.
கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நகரம் முழுவதும், சிட்டி ரயில் நிலையம், சனேகுருவனஹள்ளி நிசர்கா பவன், ஹெப்பாள் கால்நடை மருத்துவக் கல்லூரி, ஜெயநகர் ஷாலினி மைதானம், மைசூர் சாலை கவிகா, நிமான்ஸ் மற்றும் எச்.எஸ்.ஆர் லேஅவுட் சென்ட்ரல் சில்க்போர்டுக்கு அருகில் 7 காற்றின் தரக் குறியீடு கண்காணிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது.
இவை வணிக, கலப்பு மற்றும் அமைதியான மண்டலங்களை உள்ளடக்கியது. இதோடு ஆனேக்கலில் உள்ள ஜிகினி தொழில்துறை பகுதி, கெங்கேரியில் உள்ள ஆர்வி. பொறியியல் கல்லூரி, கஸ்தூரிநகர் ஆர்டிஓ மற்றும் பீன்யா தொழில்துறை பகுதியில் நான்கு புதிய கண்காணிப்பு நிலையங்களை வாரியம் புதிதாக சேர்த்துள்ளது. இந்த நிலையங்களில் காற்றின் தரம் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபாடுகளுக்காக 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.
நகரத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட இடம் சிட்டி ரயில் நிலையமாகும். ஆகஸ்ட் 2021 இல் 28 நாட்கள் நல்ல காற்றின் தர நாட்களைப் பதிவு செய்திருந்தாலும், நிகழாண்டு ஆகஸ்டில் ஐந்து நாட்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலான இடங்களில் பிஎம் 2.5 மற்றும் பிஎம் 10 ஆகிய முதன்மை மாசுபடுத்திகளின் செறிவினால் நல்ல அல்லது கெட்ட காற்றின் தரக் குறியீடு நாட்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், நகரின் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், மோசமான போக்குவரத்து மேலாண்மை மற்றும் கட்டுமான தளங்களில் சோதனைகள் இல்லாததால் மிகப்பெரிய தூசி மாசு ஏற்படுகின்றன.
நகரத்தில் நல்ல காற்றின் தரம் நாட்கள் குறைவதற்கு சில காரணங்களாக, கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் வாகன உமிழ்வுகள் அதிக பிஎம் 10 மற்றும் பிம் 2.5 அளவுகள் காற்றின் தரக் குறியீடு மோசமடைய வழிவகுக்கின்றன‌. சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்த வாகனங்களின் சராசரி வேகம் குறைகிறது. போக்குவரத்து தேக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.