பூங்கா விமான நிலைய முனையம்

பெங்களூர் நவ.11
பெங்களூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் பூங்கா விமான நிலைய முனையம் இன்று திறக்கப்பட்டது. பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இரண்டாவது முனையம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது அழகாக வித்யாசமாக ஒரு பூங்கா போல் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்
பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் புறப்பட்டு பெங்களூரு வந்தார். பெங்களூருவில் இன்று காலை 9.45 மணிக்கு கன்னட பக்தி இலக்கிய முன்னோடியான கனக தாசா் மற்றும் மகரிஷி வால்மீகி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினார். பின்னர், பிரதமர் மோடி நாட்டில் 5-வதாகவும், தென் இந்தியாவில் முதலாவதாகவும் வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையை சென்னை-மைசூரு இடையே கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின்னர் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2-வது முனையத்தை திறந்து வைத்தார்.
பெங்களூரு விமான நிலையத்தில் நெரிசலை சமாளிப்பதற்காக கட்டப்பட்டுள்ள இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் பயணிகள் வருகை மற்றும் விமான சேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு தற்போது 2.5 கோடி பயணிகள் கையாளப்படும் நிலையில், இந்தப் புதிய முனையம் மூலம், 5 முதல் 6 கோடி பயணிகள் வரை கையாள முடியும். தோட்டநகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2-வது முனையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு தோட்டத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் உணர்வார்கள். பசுமை சுவர்கள், தொங்கு தோட்டங்கள் மற்றும் வெளிப்புறத் தோட்டங்கள் என 10,000 சதுர மீட்டருக்கும் மேலான பரப்பளவைப் பயணிகள் பயன்படுத்தப்பட உள்ளனர்.