பெகாசஸ் ஸ்பைவேர்; இஸ்ரேல் நிறுவனம் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு

வாஷிங்டன், நவ. 24- பெகாசஸ் ஸ்பைவேர் என்னும் உளவு மென்பொருளை ஐபோன்களில் நிறுவுவதற்கு எதிராக அதனை உருவாக்கிய இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் மீது முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் ஸ்பைவேர் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ஸ்பைவேர் மூலமாக அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன்களும் பெருமளவில் ஒட்டுக்கேட்கப்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனம் மீது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தனது செயலிகளை ஐபோன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டும்,’ எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தங்களின் 165 கோடி உபகரணங்களில் ஐபோன்கள் மட்டும் 100 கோடி எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என்எஸ்ஓ பெரும் சதி செய்துள்ளதுதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால், என்.எஸ்.ஓ நிறுவனம், பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க அரசாங்கங்களுக்கு உதவும் செயலுக்காக மட்டுமே பெகாசஸ் ஸ்பைவேரை உருவாக்கியதாக கூறியுள்ளது.