பெங்களுருவில் வீடு வீடாக தடுப்பூசி போடும் திட்டம் துவக்கம்

பெங்களூரு: நவம்பர். 24 – பெருநகர் பெங்களூரு மாநகராட்சி கேர் இந்தியா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து 80 தடுப்பூசி இரு சக்கர வாகனங்கள் மற்றும் 16 நடமாடும் (நான்கு சக்கர வாகனம் ) தடுப்பூசிகள் வாகனத்தை இன்று மாநகராட்சி தலைமை ஆணையர் கௌரவ் குப்தா துவக்கி வைத்தார். ஒவ்வொரு வலையத்திற்கும் 8 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 2 நடமாடும் நான்கு சக்கர வாகனங்களை ப்ளாக் மற்றும் சிறு வீதிகள் அளவில் சென்று தடுப்பூசிகள் போட செல்லும் சுகாதார ஊழியர்கள் பணியில் இறங்க உள்ளனர்.

நகரில் இதுவரை மொத்தம் 1,36,99,018 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதுடன் இதில் 80,57,563 முதல் டோஸ்(88 சதவிகிதம்) மற்றும் 56,41,455 இரண்டாவது டோஸ் (62 சதவிகிதம் ) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன . மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. எலஹங்காவில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் பவன் மற்றும் மல்லேஸ்வரத்தின் இளைஞர்கள் கபடி விளையாட்டு மைதானதில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. நடந்து மற்றும் வாகனங்களில் வந்தும் பொதுமக்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.