பெங்களூரின் கழிவு இடமாற்றத் திட்டத்திற்கு குமாரசாமி எதிர்ப்பு

பெங்களூரு, அக். 16: பெங்களூரின் கழிவு இடமாற்றத் திட்டத்திற்கு மஜத கட்சியின் தலைவர் எச்.டி.குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து அண்டை மாவட்டங்களுக்கு கழிவுகளை பதப்படுத்தும் வசதிகளை மாற்றும் துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் திட்டத்திற்கு மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை, குமாரசாமி இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது: பிராண்ட் பெங்களூரை ஊக்குவிக்கும் சாக்கில், ராமநகரம் போன்ற அண்டை பகுதிகளை பெங்களூரின் கழிவுகளை கொட்டும் இடமாக பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்தார்.
பெங்களூரைச் சுற்றி பல்வேறு திசைகளில் நான்கு பகுதிகளில் குப்பைக் கிடங்கை அமைக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று குமாரசாமி மாநில அரசைக் கேட்டுக்கொண்டார். எதிர்காலத்தில் சாத்தியமான ரியல் எஸ்டேட் மேம்பாட்டிற்காக நகர எல்லைக்குள் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதே இந்த குப்பைக் கழிவுகளை புறநகர்ப் பகுதிக்கு மாற்றுவத‌ன் பின்னணியில் உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
இது குறித்து குமாரசாமி தனது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரில் உருவாகும் கழிவுகளை அகற்ற 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள 4 நிலங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு மாநகராட்சியில் தினமும் சுமார் 1,650 மெட்ரிக் டன் குப்பைகள் உற்பத்தியாகின்றன. இந்த மாவட்டங்களில் வசிப்பவர்களின் சுற்றுப்புறங்களில் இவ்வளவு பெரிய அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டால் அவர்களின் கதி என்னவாகும் என்பதனை யோசிக்க வேண்டும்.
ராமநகரம், சிக்கபள்ளாப்பூர், பெங்களூரு ஊரகம் மற்றும் கோலார் ஆகியவை தோட்டக்கலை, பட்டு உற்பத்தி மற்றும் பால் பண்ணை ஆகியவற்றில் தங்கள் பங்களிப்பிற்காக புகழ்பெற்றவை.
இந்த பகுதிகளில் கணிசமான அளவு கழிவுகளை கொட்டுவது இந்த முக்கிய தொழில்களுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் பல்லுயிர் பெருக்கத்தையும் கடுமையாக சீர்குலைக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் செலவில் பெங்களூரு பிராண்ட் கட்டப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன் என எச்சரித்தார். சுற்றுச்சூழல் பேரழிவு, தொழில்துறை, விவசாயம் மற்றும் உள்நாட்டு ஆதாரங்களால் மாசுபடுவதால் சுத்தமான குடிநீர் ஆதாரத்திலிருந்து மிகவும் மாசுபட்ட நீர்வழியாக மாறிய விருஷபாவதி நதியை குறிப்பிட்டார்.
ராமநகரில் முன்மொழியப்பட்ட குப்பைக் கிடங்குகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துவதைத் தடுப்பதற்கான தனது உறுதியை அவர் வெளிப்படுத்தினார். இப்பகுதியில் குப்பைக் கழிவுகளை கொட்டினால் காற்றை மட்டுமல்ல, நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும். ராமநகரில் இது நடக்க நான் அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.