பெங்களூரில் அதிகாலை திருட்டுகள் அதிகரிப்பு

பெங்களூரு, நவ. 4: வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், சிவாஜிநகர், ஸ்டேஷன் சாலையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமதுவின் இல்லத்தின் அருகே, செய்தித்தாள் விற்பனையாளர் சி.ஆண்டனி என்பவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தை 2 இளைஞர்கள் அவர் மீது மோதினர்.
கீழே விழுந்த ஆண்டனியை இளைஞ‌ர்கள் கத்தி முனையில் பிடித்து செல்போனை பறித்து சென்றனர். தன்னிடம் பணம் இல்லை என ஆண்டனி கூறியதும், அவரது தொடையில் கத்தியால் குத்தியுள்ளனர். அந்த வழியாகச் சென்ற மற்றொரு செய்தித்தாள் விற்பனையாளரான விக்டர், ஆண்டனியின் அலறலுக்கு பிறகு உதவி அளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அந்த‌ இளைஞர்கள் அவரை கத்தியைக் காட்டி மிரட்டியுனர். சில நிமிடங்களில் வேறு சில செய்தித்தாள் விற்பனையாளர்களும் அங்கு வந்ததால், 2 இளைஞர்களூம் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ஆண்டனியை, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த மாதம் ஒரு அதிகாலையில், தனது மாமியாரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக கே.ஆர்.மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்த ஒருவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்தி, ரூ. 8,000 பறித்துச் சென்றனர். சில மாதங்களுக்கு முன்பு, ரிச்மண்ட் மேம்பாலத்தில் 45 வயதான ஹாப்காம்ஸ் நிர்வாகியை பைக்கில் வந்த மர்ம நபர்கள் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு 25 தையல்கள் போடப்பட்டன.பெங்களூரு முழுவதும் தனியாக நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் மற்றும் ஓட்டுநர்களை குறிவைத்து இரு சக்கர வாகனத்தில் வரும் மர்மநபர்கள் அதிகாலையில் கொள்ளை, திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அக். 17ஆம் தேதி காலை, அல்சூர் மெயின் சேனல் சாலையில் உள்ள பிஎம்டிசி பேருந்து நிறுத்தம் அருகே, செய்தித்தாள் விற்பனையாளர் வெங்கடேஷ் பிரசாத் என்பவரை பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் ஹெல்மெட்டில் தாக்கிவிட்டு, அவரிடம் இருந்து மொபைல் போனை திருடிச் சென்றனர். பின்னர் பிரசாத்தின் மொபைல் போனில் இருந்து ரூ.46 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்துள்ளனர்.