பெங்களூரில் இன்றும் கனமழை பொதுமக்கள் உஷார்

பெங்களூரு, அக். 12: பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரில் தொடர்ந்து இரண்டொரு நாட்களாக‌ மழை பெய்து வருவதால், மாநகர‌ம் வெள்ளத்தில் மூழ்கியது. மழை வெள்ளத்தால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
பெங்களூரு, சாம்ராஜ்நகர், குடகு, மண்டியா, பெங்களூரு ஊரகம், சிக்கமகளூரு, ராமநகரம் ஆகிய தென் உள் மாவட்டங்களுக்கு இன்று கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதேபோல, காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெங்களூரில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக மழை குறைந்து, மாநில அளவில் குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் பரவலாக பருவமழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.