பெங்களூரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்து கொடூர கொலை

பெங்களூரு, ஆக. 14: பெங்களூரு பன்னர்கட்டா அருகே 39 வயதான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார். இறந்தவர் அருகில் உள்ள‌ கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. அவர் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் தனது தங்கையின் இரண்டு வயது மகனுடன் நடைபயிற்சியில் ஈடுபட்டு, பின்னர் காணாமல் போனதாக‌ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வனப்பகுதிக்கு அருகில் உள்ள தோப்பில் பார்ட்டியில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பார்த்தபோது, முகத்தில் காயங்களுடன் குழந்தை இருப்பது தெரியவந்தது. ஆனால், காணாமல் போன பெண்ணை, அவரது குடும்பத்தினர் கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடியும் பலனில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை கிராம மக்கள் பெண் ஒருவரின் அரை நிர்வாண உடலைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது. சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் வெளியே செல்வது பாதுகாப்பற்றது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.அடையாளம் தெரியாத சிலர் அவரை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். வழக்குகள் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் தனியுரிமையைப் பாதுகாக்க அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.