பெங்களூரில் உடலை நடுநடுங்க வைக்கும் கடும் குளிர்

பெங்களூர் : டிசம்பர் . 22 – மார்கழி மாதம் துவங்கி ஏற்கெனவே ஐந்து நாட்கள் கடந்து விட்டது . மார்கழி என்றாலே குளிரும் திருப்பாவையும் தான் மக்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் . இந்த வகையில் நகரில் குளிர் துவங்கிவிட்டது . சிலிக்கான் சிட்டி என்றே புகழ்பெற்றுள்ள பெங்களூரில் என்னதான் அடுக்குமாடி குடியிருப்புகள் . தகவல் தொழில் நுட்ப வளாகங்கள் , மால்கள் . மெட்ரோ மற்றும் நவீன முன்னேற்றங்கள் என விஞ்ஞான ரீதியில் பலவகைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் சில விஷயங்களில் இயற்கை நியதிகளை எந்த நவீன விஞ்ஞானமும் மாற்ற முடியாது என்பதற்கு மார்கழி மாத குளிரும் ஒரு உதாரணம் . நகரில் தற்போது நிலவும் குளிரை எதிர்கொள்ள இனி பொதுமக்கள் அதிகாலைகளில் வெளியே செல்லவிருந்தால் நிச்சயம் ஸ்வெட்டர் அல்லது சால்வையை கண்டிப்பாய் பயன்படுத்தியேயாக வேண்டிய அளவிற்கு குளிர் மற்றும் பனி மூட்டம் அதிகரித்து வருகிறது. மார்கழி மாதம் என்றாலே அதிகாலையில் கடும் குளிரும் பகல் நேரத்தில் சூரிய உஷ்ணமும் என்பது தொன்று தொட்டு காலகாலமாக இருந்து வரும் நிலையாகும் . அந்த வகையில் இன்று வரை இந்த நிலையில் எந்த மாற்றமுமின்றி நகரிலும் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பனி மூட்டம் மற்றும் நடுங்க வைக்கும் குளிர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.வெறும் பெங்களூரு மட்டுமின்றி மாநிலம் முழுக்க நடுங்கும் குளிரும் வறண்ட காற்று வீச்சும் தொடர்ந்துள்ளது. இந்த நிலை அநேகமாக பொங்கல் பண்டிகை வரை நீடிப்பது வழக்கம் . தவிர இந்த குளிரிலிருந்து தங்களை காத்துக்கொள்ள மாநிலத்தின் குடிசை பகுதிகளில் பெரும்பாலானோர் குப்பைகளை கொளுத்தி அந்த தீயின் அருகில் அமர்ந்து தங்கள் குளிரை போக்கி வருவது சாமான்ய காட்சியாக உள்ளது. இன்றைய நிலையில் நகரின் குறைந்த பட்ச வெட்ப நிலை 17 டிகிரி செல்ஸியசாக உள்ளது. இதுவே முன்வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் நகர மக்கள் இன்னும் அதிகளவுக்கு நடுங்க வைக்கும் குளிருக்கு தயாராக வேண்டியுள்ளது.