பெங்களூரில் குண்டும் குழியுமான சாலை வாகன ஓட்டிகள் அவதி

பெங்களூரு, செப். 25: மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும் சீரமைக்கப்படாமல் உள்ள சாலையால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
பெங்களூருவில் உள்ள கொடிகேஹள்ளி மெயின் ரோட்டில், ஐயப்பநகர்‍, கே.ஆர்.புராவில் இருந்து ஹூடி மற்றும் ஒயிட்ஃபீல்டு வரையிலான 1.3 கி.மீ தூரம், வாகன ஓட்டிகளுக்கு சிம்ம சொப்பனமாக உள்ளது. கொடிகேஹள்ளி மெயின் ரோட்டில் 1.3 கி.மீ நீளத்திற்கு புதிதாக போடப்பட்டுள்ள நடைபாதைகளில் அதிக அளவில் பள்ளங்கள் மற்றும் தூசி படிந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதியில் வசிப்பவர்கள் போக்குவரத்துக்கு தனிப்பட்ட வாகனங்கள் அல்லது ஆட்டோரிக்ஷாக்களையே நம்பியுள்ளனர். தண்ணீர் இணைப்பு மற்றும் மேன்ஹோல் பிரச்சினைகளை தீர்க்க பெங்களூரு குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் (BWSSB) சாலை தோண்டப்பட்டது. ஆனால், அதனை மீண்டும் சீரமைக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொதுமக்கள் தொடர்ந்து சிரமத்தையும், வேதனையையும் அனுபவிக்கின்றனர்.
நடைபாதைகள் புதிதாக போடப்பட்டிருந்தாலும், அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் தூசியை கிளப்புவதாலும், மழை பெய்தால், தேங்கிக் கிடக்கும் தண்ணீர் தெரிப்பதாலும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கொடிகேஹள்ளி ஒரு பரபரப்பான குடியிருப்பு பகுதி. சாலையில் பிஎம்டிசி பேருந்து சேவை இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பொதுவாக தங்கள் தனிப்பட்ட வாகனங்கள் அல்லது ஆட்டோரிக்ஷாக்களை பயணத்திற்கு பயன்படுத்துகின்றனர்.
ஏறக்குறைய ஒரு ஆண்டாக இந்த சாலையில் மழை பெய்யாத நாட்களில், அதிகளவில் தூசி படிந்து விடுகிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்கள் முககவசம் அணிந்து செல்ல வேண்டும். இல்லை என்றால் தூசியால் சுகாதாரக் கேடுவை சந்திக்க நேரிடுகிறது.
பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் சாலையை தோண்டியுள்ளது. எனவே இதற்கு அதுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) அதிகாரிகள் தெரிவிக்கின்ற‌னர். இது குறித்து பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய நிர்வாக பொறியாளர் மிர்சா அன்வர் கூறியது: குடிநீர் இணைப்பு மற்றும் தெருவில் மேன்ஹோல்கள் நிரம்பி வழிவது குறித்து எங்களுக்கு நிறைய புகார்கள் வந்தன.
எனவே, நாங்கள் அந்த சாலையை தோண்டினோம். இப்போது நாங்கள் பணியை முடித்துவிட்டோம். சாலையை சீரமைக்க டெண்டர் விடப்போகிறோம் என்றார். சாலையை சீரமைத்தால்தான் பொதுமக்களின் பிரச்னை தீரும். இதனை அதிகாரிகள் உணர வேண்டும்.