பெங்களூரில் டேங்கர் தண்ணீர் விலை ரூ 900 ஆக உயர்வு


பெங்களூரு, ஏப். 7- நகரில் வெயிலின் தாக்கம் கூடக்கூட டேங்கர் தண்ணீர் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. தற்போது 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் தண்ணீரின் விலை 500 லிருந்து 900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலைகள் அந்தந்த பகுதிகள் மற்றும் வாகனப்போக்குவரது வசதியை பொறுத்து மாறுபடுகிறது. காவிரியிலிருந்து நகர குடி நீர் வாரியம் நாளொன்றுக்கு 14 ஆயிரத்து 400 லட்ச லிட்டர் குடிநீரை 7. 4 லட்ச வீடுகளுக்கு விநியோகித்து வந்தாலும் இந்தளவு நீர் மொத்தமும் நகரின் காவேரி நீர் சப்ளை உள்ள பகுதிகளுக்கு மட்டுமே போதுமானது என்பதால் மற்ற பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு விண்ணை முட்டியுள்ளது. இதனால் இந்த பகுதி மக்கள் டேங்கர் நீரை மட்டுமே நம்ப வேண்டியுள்ளது. தவிர மாநகராட்சிக்கு சமீபத்தில் சேர்க்கப்பட்ட 110 கிராமங்களில் இன்னும் காவேரி நீர் விநியோகம் துவங்கவே இல்லை என்பதால் இவர்கள் அனைவரும் போர்வெல் அல்லது டேங்கர் தண்ணீரையே நம்பி வாழ்கிறன்றனர். இதுமட்டுமின்றி நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் ஆழத்துக்கு சென்று விட்டதால் இப்போது டேங்கர் தண்ணீர் விடுத்து வேறு உபாயங்கள் இல்லை. டேங்கர் வாயிலாக விநியோகிக்கப்படும் தண்ணீர் மிகவும் செலவு பிடித்தாலும் இந்த தண்ணீரின் தரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நகரில் 1200 பேர் டேங்கர் வாயிலாக தண்ணீர் விநியோத்தாலும் இவர்களில் 200 பேர் மட்டுமே மாநகராட்சியின் அதிகாரபூர்வ வர்த்தக அனுமதி பெற்றவர்கள். இந்த டேங்கர் தண்ணீரின் தரத்தை சோதிக்க முன்னர் ஒரு திட்டமே கொண்டுவரப்பட்டது எனினும் இன்றுவரை அது செயலுக்கு வரவில்லை. இது மட்டுமின்றி டேங்கர் தண்ணீரின் விலையை கட்டுப்படுத்தவும் முன்னர் திட்டமிடப்பட்டு அதுவும் இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. இது குறித்து நகரின் புறப்பகுதியில் வசிக்கும் ஒருவர் கூறுகையில் “நாங்கள் டேங்கர் தண்ணீருக்கு அவ்வளவு செலவு செய்ய தயாராயிருப்பினும் டேங்கர் தண்ணீர் எங்களின் தேவைக்கான நேரத்தில் கிடைப்பதில்லை. ஒரு முறை எங்கள் சம்புகள் வற்றி விட்டதால் டேங்கர் உக்கு போன் செய்தோம் .அன்று மாலைக்குள்ளாவது சம்பை நிரப்பிவிடலாம் என நினைத்தேன். ஆனால் டேங்கர் தண்ணீர் கிடைக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் காக்க வேண்டும் என்றறிந்து அதிர்ச்சியடைந்தேன். ” என்றார் .இது குறித்து டேங்கர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில் ” தற்போது டீசல் மற்றும் மின்சார கட்டணங்கள் மிகவும் அதிகரித்துவிட்ட நிலையில் இப்போது டேங்கர் நீருக்கான டிமாண்டுகளும் அதிகரித்துவிட்ட நிலையில் எங்களுக்கு வேறு வழியில்லை. என்றார். ஆனாலும் இது குறித்து குடிநீர் வாரியம் கூறுகையில் ” கடந்த ஆண்டு நகரில் நல்ல மழை பெய்துள்ளதால் எந்த நீர் தேக்கங்களிலும் தண்ணீருக்கு குறைபாடில்லை. தற்போதைக்கு கே ஆர் எஸ் அணைக்கட்டில் 23.23 டி எம் சி மற்றும் கபிணி யில் 9.15 டி எம் சி நீரும் இருப்பு உள்ளது. பெங்களூருவுக்கு மாதம் ஒன்றுக்கு 1. 6 டி எம் சி அளவுக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில் இதுவே கோடை காலங்களில் 5 டி எம் சி க்கு அதிகரித்து விடுகிறது. இதற்கு போதுமான அளவில் தற்போது தண்ணீர் உள்ளது. நகரின் 11 கிராமங்களுக்கு 7,750 லட்ச லிட்டர் காவேரி குடிநீர் வழங்கும் ஐந்தாம் கட்ட திட்டம் 2023-24க்குள் முடிவடைந்து விடும். பின்னர் இது போன்ற குடிநீர் பிரச்சனைகள் நகரில் இருக்காது ” என்றார்.