பெங்களூரில் திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் பாதிப்பு

பெங்களூரு, செப். 1: பெங்களூரில் வியாழக்கிழமை இரவு திடீரென பெய்த கன மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பெங்களூரில் வியாழக்கிழமை இரவு பசவனகுடி, பனசங்கரி, ஜெயநகர், கார்ப்பரேஷன் சர்க்கிள், சம்பங்கிராம நகர், டபுள் ரோடு, யஷ்வந்தபுரா, ஹெப்பாள், மெஜஸ்டிக், காந்திநகர், கே.ஆர் சர்க்கிள், ராஜாஜிநகர் உள்ளிட்ட சில இடங்களில் கன‌மழை பெய்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கடந்த ஜூலை மாதத்தில் மாநிலத்தில் பரவலாக பருவ மழை பெய்தது. பின்னர் மழை காணாமல் போனது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு மாநில தலைநகர் பெங்களூரு, மண்டியா, கோலார், தாவணகெரே மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
பெங்களூரில் பசவனகுடி, பனசங்கரி, ஜெயநகர், கார்ப்பரேஷன் வட்டம், சம்பங்கிராம்நகர், டபுள் ரோடு, யஷ்வந்தபுரா, ஹெப்பாள், மெஜஸ்டிக், காந்திநகர், கே.ஆர் சர்க்கிள், ராஜாஜிநகர் உள்ளிட்ட சில இடங்களில் இரவில் மிதமான மற்றும் கன‌ மழை பெய்தது.
திடீரென பெய்த மழையால் சாலைகளில் தேங்கிய நீரால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மழையின் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் மெதுவாக போக்குவரத்து நகர்ந்து சென்றது.பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டியா மாவட்டம், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சாரல் மழை பெய்ததால், தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.திடீரென பெய்த மழையால், நெடுஞ்சாலை ஓரத்தில் சுமார் 2 கி.மீ தூரம் வரை 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.கோலார் பகுதியிலும் சுமார் 30 நிமிடம் இடைவிடாது மழை பெய்தது. மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் பாதிப்பிற்குள்ளான காட்சிகளை காண முடிந்தது.கடந்த இரண்டு வாரங்களாக வளிமண்டலத்தில் வறண்ட காற்றால் கோலார் உள்ளிட்ட மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தற்போது மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் உருவாகியுள்ளதால் கோலாரில் மேலும் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.