
பெங்களூரு, அக். 5: பிபிஎம்பியில் கடந்த ஆண்டைவிட, நிகழாண்டு 10 சதம் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் கிட்டத்தட்ட 2.8 லட்சம் தெருநாய்கள் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு மதிப்பிட்டுள்ளது. பிபிஎம்பியின் சுகாதாரத் துறையின் சிறப்பு ஆணையர் கே.வி.திரிலோக் சந்திரா புதன்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி இது தெரிய வந்துள்ளது.
2019 ஆம் ஆண்டை விட நிகழாண்டு தெரு நாய்களின் எண்ணிக்கை 10% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 3.1 லட்சத்தில் இருந்து இப்போது 2.8 லட்சமாக குறைந்துள்ளது என்று கணக்கெடுப்பு காட்டுகிறது. விலங்கு பிறப்புக் கட்டுப்பாட்டை (ஏபிசி) திறம்பட செய்துள்ளதால் நாய்களின் எண்ணிக்கையைக் குறைந்துள்ளது என்று சந்திரா தெரிவித்தார்.
நாய்களின் கருத்தடை சதவீதம் 20% (2019 இல் 51.2% லிருந்து 71.8%) அதிகரித்துள்ளது என்றும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக பிபிஎம்பி அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 100 சர்வேயர்கள் 50 குழுக்களாக இந்த இயக்கத்தை மேற்கொண்டனர். இதனை பிபிஎம்பியின் கால்நடை பராமரிப்பு துறையின் 15 அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.
ஏரியின் சுற்றுப்புறங்கள், குடிசைப் பகுதிகள், வணிகப் பகுதிகள் மற்றும் பொதுப் பகுதிகள் என நான்கு வகையாகவும், அவற்றை 6,850 கட்டங்களாக (மைக்ரோ மண்டலங்கள்) பிரித்தனர், ஒவ்வொன்றும் 0.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 1,360 மைக்ரோ மண்டலங்களில் 12 நாட்களில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR)-நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வெட்டர்னரி எபிடெமியாலஜி அண்ட் டிசீஸ் இன்ஃபர்மேடிக்ஸ் (NIVEDI) மற்றும் மிஷன் ரேபிஸ் (WVS) ஆகியவற்றால் தொழில்நுட்ப ஆதரவு வழங்கப்பட்டது. ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இது நாட்டிலேயே முதல் முறை என்று பிபிஎம்பி தெரிவித்தது.
நகரத்தில் சுமார் 71.8% தெருநாய்கள் கருத்தடை செய்யப்படுவதாகவும், நாய்களின் எண்ணிக்கையை பிபிஎம்பி திறம்பட நிர்வகித்து வருவதாகவும், இது நாய் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தவும் வெறிநாய் நோயை ஒழிக்கவும் உதவும் என்றும் சந்திரா தெரிவித்தார். தரவுகளின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 15,000 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு, இது 22,000 ஆக இருந்தது. இதில், கடந்த ஆண்டு 130க்கும், இந்த ஆண்டு 70க்கும் அதிகமான வெறிநாய்கள் கடித்துள்ளன. பிபிஎம்பி ஏபிசி மற்றும் ஏஆர்வியை செயல்படுத்தும் என்றார்.
2030க்குள் ரேபிஸ் நோயை திறம்பட ஒழிக்க திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. ஆண் நாய்களின் எண்ணிக்கை 1,65,341 மற்றும் பெண் நாய்கள் 82,757 என்றும், 31,230 நாய்களின் பாலினத்தை அடையாளம் காணவும் முடியவில்லை. புதிதாக வரையறுக்கப்பட்ட 225 வார்டுகள் வாரியாக தெருநாய்கள் கணக்கெடுக்கப்படும் என பிபிஎம்பி அதிகாரிகள் தெரிவித்தனர்.