பெங்களூரில் நடக்கும் விபத்துகளுக்கு பெரும்பாலும் மது போதையே காரணம்

பெங்களூரு, செப். 23: மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களால் மட்டுமின்றி சாலையில் நடப்பவர்களாலும் விபத்து ஏற்படுவதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துகள் ஏற்படுத்திய ஓட்டுநர்கள், சாலையில் நடப்பவர்கள் அதற்கு முன்பு மது அருந்தியிருக்கிறார்களா என்பது குறித்து பெங்களூரு நகர போலீஸார் சமீபத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மது அருந்தியவர்கள் வாகனங்களை ஓட்டும் போது, சாலைகளில் நடக்கும் போதும் விபத்துகள் அதிகரித்து உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
வாகன ஓட்டுநர்கள் மற்றும் சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள் விப‌த்தின் போது மதுபோதையில் இருந்தார்களா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 22 விபத்து வழக்குகளில், ஓட்டுந‌ர்கள் மது அருந்தியிருப்பதும், நான்கு சம்பவங்களில், விபத்துக்குள்ளானவர்கள் மது அருந்தி இருப்பது தெரியவந்துள்ளது. அதில் சிலர் குறைந்த வயதுடையவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறை இணை ஆணையர் (போக்குவரத்து) எம்.என்.அனுசேத் இந்த முயற்சியின் முதன்மை நோக்கத்தை விளக்கினார். மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பின்விளைவுகளைத் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் முக்கிய குறிக்கோள். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்தினார்களா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம் என்றார்.
பெங்களூரில் 131 உயிரிழப்பு விபத்துக்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். 437 வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் 50 மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதில் பெரும்பாலும், வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களும் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஒரு நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பதாக குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது ஐபிசி 304ஏ இன் கீழ் குற்றம் சாட்டப்படும். தீவிர விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய விதிகளின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ. 10,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். இதுபோன்ற துயர சம்பவங்களை தடுக்க, குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னர், ஆபத்தான விபத்துக்களை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். மது அருந்திய சிலர் நேர இடைவெளி காரணமாக குற்றச்சாட்டில் இருந்து தப்புகின்றனர். இதை தவிர்க்க, போலீசார் தற்போது ஆல்கோமீட்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இது ஆல்கஹால் அளவை உடனடியாக மதிப்பீடு செய்கிறது.
விபத்துகளுக்கு காரணமான காரணிகள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர். எனவே, இதுபோன்ற சம்பவங்களில் மதுவின் பங்கைப் பற்றிய விரிவான புரிதலைப் பெறுவதற்கு, அனைத்து உயிரிழப்பு மற்றும் உயிரிழப்பு அல்லாத விபத்து நிகழ்வுகளிலும் மருத்துவ பரிசோதனைகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.