பெங்களூரில் நடைபெற்ற தொடர் விபத்துகளில் 3 பேர் பலி

பெங்களூரு, அக். 30: பெங்களூரின் நடைபெற்ற‌ வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலியாகி உள்ள‌னர்.
சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில், நகரின் வடக்குப் பகுதியில் உள்ள பிஇஎல் வட்டம் அருகே, ரவீந்திரன் (40) என்ற பாதசாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.
ரவீந்திரன் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் மீது மோதிய‌ வாகனம் கனரக சரக்கு வாகனமாக இருக்க வேண்டும் என ஜலஹள்ளி போக்குவரத்து போலீசார் தெரிவித்த‌னர்.
சாலையின் ஒரு ஓரமாக நடந்து சென்ற ரவீந்திரன் மீது மோதிய வாகனம், உடனடியாக அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய வாகனத்தை தேடி வருகின்றனர்.
பலியானவர் கோலார் மாவட்டம், முல்பாகல் பகுதியை சேர்ந்தவர் என்றும், தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் டிரைவராக பணியாற்றிவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
எலஹங்காவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வளாகத்திற்கு வெளியே விமான நிலைய சாலையின் சர்வீஸ் சாலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற‌ விபத்தில் சுதாகர் (41) என்ற பிஎஸ்எஃப் வளாகத்தில் பணிபுரியும் சமையலர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இரவு 10.30 மணியளவில் சுதாகர் தனது பைக்கில் நண்பருடன் சென்று கொண்டிருந்தப்போது, ​​கிரீஷ் (32) என்பவர் அவரது பைக் மீது அதிவேகமாக மோதி உள்ளார். இதில் சுதாகர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். படுகாயமடைந்த கிரீஷ் அருகில் உள்ள மருத்துவமனையில் அதிகாலை 2 மணியளவில் இறந்தார். இது குறித்து எலஹங்கா போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.