பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் வாடகை 50 சதம் உயர்வு

பெங்களூரு, ஆக. 31: பெங்களூரின் தொழில்நுட்ப வழித்தடமான மாரத்தஹள்ளி, பெல்லந்தூர் மற்றும் ஒயிட்ஃபீல்டில் வீட்டுவசதிக்கான தேவை அதிகரித்து வருவதால், கரோனா பாதிப்பிற்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது குடியிருப்பு வாடகைகள் 50 சதம் அதிகரித்துள்ளது.
ஐடி காரிடாரின் எந்த குடியிருப்புப் பகுதியிலும் 1,000 சதுர அடிக்குக் குறைவான 2‍பிஎச்கே வீட்டிற்கு வாடகைதாரர்கள் மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ 30,000 வாடகை செலுத்த வேண்டும். அதே சமயம் கிளப்ஹவுஸ் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு ரூ 50,000 செலவாகும்.
உள்ளூர் சொத்து உரிமையாளர்களின் கூற்றுப்படி, 2‍பிஎச்கே வீடுகள், பிளாட்கள் கரோனா பாதிப்பிற்கு முன் ரூ. 12,000-20,000க்கு வாடகைக்கு விடப்படும். இது இப்போது ரூ.25,000-40,000 வரை உள்ளது. அதேபோல, 1‍பிஎச்கே வீடுகள், பிளாட்கள் ரூ.7,000-10,000க்குக் கிடைத்தன. தற்போது ரூ.15,000-25,000க்கு வரை உயர்ந்துள்ளன.
அதிக வாடகை இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் குறுகிய காலத்தில் வாடகைக்கு விடப்படுகின்றன என்று பல சொத்து தரகர்கள் தெரிவித்தனர்.பர்னிஷ் செய்யப்பட்ட அல்லது செமி ஃபர்னிஷ் செய்யப்பட்ட அனைத்து வகையான குடியிருப்பு சொத்துக்களுக்கும் அதிக தேவை உள்ளது. ஆனால் தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய காலியான வீடுகள் இல்லை. ஒயிட்ஃபீல்டி பகுதியில் 3‍பிஎச்கே பிளாட்கள், வீடுகளை அதிகம் பேர் விரும்புகிறார்கள் என்று சொத்து தரகர் ஒருவர் தெரிவித்தார். பல ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளன‌. இதனால், பெங்களூரில் தங்குவதற்கு ஊழியர்கள் விரும்புகின்றனர். இதனால் குடியிருப்பு சொத்துகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
வர்தூரில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான ஜெகதீஷ் கூறுகையில், தனது பகுதியில் பல குடியிருப்பு திட்டங்கள் வரவுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகை அதிகம். “பிரெஸ்டீஜ் சாந்திநிகேதனில் உள்ள 3-பிஹெச்கே ஃப்ளாட்டுக்கு எனது நண்பர்கள் மாதம் ரூ.75,000க்கு மேல் செலுத்துகிறார்கள் என்றார்.