பெங்களூரில் பழம், கீரை விலை உயர்வு

பெங்களூரு, மார்ச் 20- பெங்களூரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பழம், கீரை, எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளன. மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்தில் பழங்களுக்கு அதிக தேவை உள்ளது. சந்தைகளில் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் காய்கறிகளின் விலை உயரவில்லை. பதினைந்து நாட்களுக்கு முன், பீன்ஸ் விலை கிலோ ரூ.80க்கு மேல் இருந்தது. இப்போது ரூ.50க்கு விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.30க்கும், வெண்டைக்காய் ரூ.40க்கும், காலிபிளவர் கிலோ ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்று மார்க்கெட் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் சுபாஷ், அக்ரம் ஆகியோர் தெரிவித்தனர். தக்காளி கிலோ ரூ.20 க்கு விற்கப்படுகிறது. தமிழக ஏலக்காய் வாழைப்பழம் சந்தைக்கு வரவில்லை.
உள்ளூர் பழங்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கிலோ ரூ.70க்கு விற்கப்படுகிறது. கோடை காலத்தில் உடல் தாகம் தணிக்க மக்கள் பழ பானங்களை நாடுகின்றனர். நுகர்வுடன் சேர்ந்து தேவையும் அதிகரித்து வருகிறது. அதனால் விலையும் அதிகம். ஆப்பிள் பழம் ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனையாகிறது. மாதுளை, திராட்சை கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்படுவதாக கே.ஆர்.மார்கெட்டில் உள்ள‌ பழ வியாபாரி லட்சுமணன் கூறினார். கோடையில் கீரைகளின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. வெந்தயம், கொத்தமல்லி கீரைகள் ஒவ்வொன்றும் கட்டு ரூ.20க்கும், புதினா ரூ.10க்கும் விற்பனையாகிறது என கீரை வியாபாரி தெரிவித்தார். பெங்களூரில் பரவலாக‌ வெப்பம் அதிகரித்து வருவதால், சந்தையில் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எலுமிச்சைப் பழத்தின் விலையும் அதிகரித்துள்ளது.
கே.ஆர்.சந்தையில் எலுமிச்சையின் அளவைப் பொறுத்து ரூ.8 முதல் ரூ.15 வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சிறிய எலுமிச்சை பழத்தின் விலை ரூ.6 எனவும் சாறு குறைந்ததால் தேவை குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.