பெங்களூரில் ரூ.75 கோடி செலவில் கழிவு நீர் சுத்தகரிப்பு ஆலை

பெங்களூரு, டிச. 15: பெங்களூரில் ரூ.75 கோடி செலவில் அசுத்த நீர் சுத்தகரிப்பு ஆலை அமைக்கப்பட உள்ளது.
பெங்களூரு புறநகரில் உள்ள மிதகனஹள்ளி டம்ப் யார்டில் இருந்து வெளியேறும் கசிவுநீரை (அசுத்தமான நீர்) சுத்திகரிக்க பெரிய ஆலையை உருவாக்க பிபிஎம்பி முன்மொழிந்துள்ளது. ரூ.75 கோடி மதிப்பீட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திட்டமானது, தற்போதுள்ள பிபிஎம்பியின் நடைமுறையில் உள்ள பதப்படுத்தப்படாத குப்பைகளை, பெரிய குவாரிக் குழிகளில் கொட்டும் முறைகளில் உள்ள தவறுகள் அனைத்தையும் காட்டுகிறது. ஏனெனில் இந்த அணுகுமுறை நிதி ரீதியாகவும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும்.
மத்திய அரசின் 15வது நிதிக் கமிஷன் வெளியிட்ட ரூ.291 கோடி நிதியில், இதற்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, பிபிஎம்பியின் திடக்கழிவு மேலாண்மை (எஸ்டபிள்யூஎம்) பிரிவுக்கு ரூ.129 கோடி கிடைத்துள்ளது. மீதமுள்ளவை ஏரிகள் (ரூ. 49 கோடி), நீர் வழங்கல் (ரூ. 70 கோடி), சுகாதாரம் (ரூ. 43 கோடி) ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மிட்டகனஹள்ளியில் சாயக்கழிவு அசுத்த நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது மிகவும் அவசியமானது. ஏனெனில் குப்பை கிடங்கு பகுதியைச் சுற்றியுள்ள நிலைமை கடுமையாக மாறியுள்ளது. இதற்கு அவசர தீர்வு தேவை. பெங்களூரைச் சுற்றியுள்ள குவாரிக் குழிகளில் அசுத்தக் க‌சிவு நீர் நிரம்பியுள்ளது. இது பல லட்சம் லிட்டர்களாக தேங்கி உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரண்டு செயலாக்க ஆலைகளில் ஒரு குப்பை கிடங்கில் ஏற்கனவே கசிவு சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. ஆனால் அவை சிறியவை.கடந்த மாதம், பிபிஎம்பியின் கமிஷனர் துஷார் கிரிநாத், மகாதேவபுரா எம்எல்ஏ மஞ்சுளா லிம்பவல்லியுடன் சேர்ந்து சாயக்கழிவு (கழிவுகளில் இருந்து வெளியேறும் அசுத்த‌ நீர்) நிரப்பப்பட்ட குவாரிகளை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, ​​பொது-தனியார் கூட்டு (பிபிபி) மாதிரியின் கீழ் பிபிஎம்பி அசுத்த நீர் சுத்தகரிப்பு ஆலையை அமைக்கும் என்று கிரிநாத் உறுதியளித்திருந்தார்.
பெரிய குவாரிக் குழிகளில் குப்பைகளை கொட்டுவது, நகரின் 5,000 டன் கழிவுகளை நிர்வகிக்கும் பொறுப்பான பிபிஎம்பியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எளிதான தீர்வாக இருந்தாலும், மூலத்திலேயே தரம் பிரிக்கவும், வார்டு மட்டங்களில் உரம் தயாரிக்கவும், கழிவுகளை செயலாக்கவும் நிபுணர்கள் அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.
குப்பை கிடங்குகள் விலை உயர்ந்து வருகின்றன. ஆரம்ப செலவுகள் தவிர, குப்பை கிடங்குகளை சுற்றியுள்ள கிராமங்களில் உள்கட்டமைப்பை உருவாக்க பிபிஎம்பி கிராம மேம்பாட்டு கட்டணத்தையும் (விடிஎஃப்) வெளியிட்டு வருகிறது.