பெங்களூரில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரிப்பு

பெங்களூர், ஏப். 30- 45 சதவிகிதம் என்ற நிலையில் பெங்களூர் நாட்டின் 7 பெரிய நகரங்களிலேயே அதிக வாடகை ஈட்டி தந்துள்ளது. இது இந்தாண்டின் முதல் காலாண்டில் அடைந்துள்ள வளர்ச்சியாகும். இது கடந்த 2019ல் இருந்ததைவிட 24 சதவிகித வளர்ச்சியாகும். கொரோனா தொற்றுக்கு பின்னர் நகரில் வாடகை வீழ்ச்சி கண்டிருந்த நிலையில் இன்று நகரின் முக்கிய பகுதிகளில் வாடகைக்கு நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. இப்போது ஐடி – பிடி ஊழியர்கள் அனைவரும் அலுவலகங்களுக்கு வந்துவிட்ட நிலையில் வீட்டு வாடகைகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.சொத்தின் மொத்த மதிப்பில் வாடகையாய் வசூலிக்கப்பட்ட சதவிகிதத்தை கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நகரின் சர்ஜாபூர் வீதியில் இந்தாண்டு துவக்கத்தில் இரண்டு அறைகள் , ஹால் மற்றும் சமையல் அறை கொண்ட சாதாரண 1000 சதுர அடி வீட்டின் வாடகை 34000 ஆகும். இது கடந்தாண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இருந்த 31600ஐ விட 8 சதவீதம் உயர்வாகும். இதே போல் ஒயிட் பீல்டில் கடந்த ஆண்டு இறுதியில் இருந்த வாடகை 30200 லிருந்து இந்தாண்டு முதல் காலாண்டில் 32500 என உயர்ந்துள்ளது. இந்த புள்ளிவிவரங்களின்படி நகரின் மிக சொகுசு 2022இலிருந்து இதுவரை40 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாடகைகள் உயர்ந்துள்ளது. தவிர பூங்கா நகரில் சொத்துக்கள் மதிப்பும் கூடிக்கொண்டே போகிறது. வீட்டு மனை பகுதிகளில் நிலங்களின் விலை ஆண்டுக்கு 9 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இது ஹைதராபாதின் 13 சதவிகித உயர்வுக்கு அடுத்ததாகும். கடந்த அக்டோபர் -டிசம்பர் மாத காலகட்டத்தில் நகரில் சொத்து மதிப்பு 4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் 4.15 சதவிகித உயர்வுடன் மும்பை இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து குறுகிராம் 4.1 சதவிகித உயர்வை கண்டுள்ளது. மொத்தத்தில் நாட்டின் மிக முக்கிய நகரங்களின் முக்கிய பகுதிகளில் வாடகை 4.9 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இப்படி ஆண்டுக்கு 5-10சத விகித வாடகை உயர்வுகளால் வீட்டு உரிமையாளர்கள் லாபமடைந்து வருகிறார்கள். இந்த நிலை தற்போதைக்கு மாறுவதாக தெரியவில்லை. உண்மையில் இனிவரும் நாட்களில் வாடகைக்கு உயரும் நிலைதான் உள்ளதே தவிர குறைவதாக இல்லை.