பெங்களூரில் வீட்டு வாடகை உயர்வு

பெங்களூர், மே 15- மாநில அரசின் கிருஹ ஜ்யோதி திட்டத்தால் பணம் மிச்சமாகும் என்று சந்தோஷத்தில் இருந்த வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி அதிர்ச்சி அளித்து வருகின்றனர். கிருஹ ஜ்யோதி திட்டத்தால் மிச்சமாகும் பணம் இப்போது வாடகையில் சேர்ந்துவிட்டது. அரசின் கிருஹ ஜ்யோதி திட்டத்தால் வாடிக்கையாளர்களுக்கு மின்சார கட்டணம் பூஜ்யமாகியிருக்கும் நிலையில் மேலும் சிலருக்கு மிக குறைந்த அளவே பில் வருகிறது. இதை கவனித்த சில வீட்டு சொந்தக்காரர்கள் திடீரென வீட்டு வாடகைகளை உயர்த்தி வருகின்றனர். இன்னும் சிலருக்கு வருட வாடகை தொகையை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட அதிகம் உயர்த்தியுள்ளனர். இதனால் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து நாகசந்திராவில் வசிக்கும் பானுபிரகாஷ் என்பவர் கூறுகையில் நான் இரண்டு வருடங்களாக வாடகை வீட்டில் வசிக்கிறேன். ஆரம்பத்திலேயே அடுத்த ஐந்தாண்டிற்க்கு வாடகை உயர்த்துவதில்லை என வீடு உரிமையாளர் நம்பிக்கை அளித்திருந்தார். முதல் மாதத்திற்கு 500 முதல் 600 ருபாய் வரை மின் கட்டணம் வந்தது. அரசின் கிருஹ ஜ்யோதி திட்டம் அமுலுக்கு வந்த பின்னர் இப்போது 50 ரூபாய்க்குள்ளாக மின் கட்டணம் வருகிறது. இது பற்றி தெரிந்தவுடன் வீடு உரிமையாளர் வீட்டு வாடகை 500 ரூபாய் உயர்த்திவிட்டார். அவர் ஐந்தாண்டுக்கு வாடகை உயர்த்தமாட்டேன் என முன்னர் நம்பிக்கை அளித்ததை நினைவு படுத்தினாலும் செவி மடுப்பதாயில்லை. இப்போது அனைத்து இடங்களிலும் வாடகைகள் உயர்ந்துள்ளது. உங்களுக்கு எதுவும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை. மின்சார கட்டணத்தில் மிச்சமாகிறதல்லவா என்கிறார்.வீட்டுக்கு வாடகைக்கு வரும்போது ஒவ்வொரு 11 மாதத்திற்கும் வாடையை 5 சதவிகிதம் உயர்த்துவதாக ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிருஹ ஜ்யோதி திட்டத்தால் மின்கட்டணம் மிச்சமாவதால் வீட்டு உரிமையாளர்கள் வாடகை தொகையை 10 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தியுள்ளனர். ஒப்பந்தம் குறித்து நினைவு படுத்தினாலும் ஏதேதோ சாக்குபோக்குகளை சொல்லி தப்பிக்கின்றனர். அப்படியும் உங்களுக்கு வாடகை கொடுக்க சிரமம் இருந்தால் வேறு வீடு பார்த்துக்கொள்ளுங்கள் என கறாராக பேசுகிறார்கள். என ராஜாஜிநகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒருவர் புலம்புகிறார்.