பெங்களூரில் 2 இடங்களில் தீ விபத்து

பெங்களூர் : டிசம்பர் . 19 – நகரில் நேற்று நள்ளிரவு மாரத்தஹள்ளி பாலம் அருகில் மற்றும் மலேஸ்வரத்தில் ஆகிய இரண்டு படங்களில் நடந்த பெரும் தீ விபத்தில் இரண்டு துணிக்கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. மாரத்தஹள்ளி பாலம் அருகில் இரவு 11. 45 மணியளவில் தீ பற்றி எரிந்ததில் லூயிஸ் பிலிப்ஸ் துணிக்கடை முழுதும் எரிந்து சாம்பலாகியுள்ளது . மூன்று அடுக்கு கட்டிடம் முழுதும் கொழுந்து விட்டு எரிந்ததில் கட்டிடத்தின் எதிரில் இருந்த தென்னை மரத்திலும் தீ பற்றியுள்ளது. தவிர கட்டிடத்தின் பக்கத்தில் இருந்த ட்ரான்ஸ்பார்மருக்கும் தீ பரவியுள்ளது. மூன்று அடுக்கு துணிக்கடை மட்டுமின்றி பக்கத்தில் இருந்த மூன்று நான்கு கடைகளுக்கும் தீ பரவியுள்ளது. தீ பிடித்தது எப்படி என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. கடையின் பக்கத்தில் இருந்த ட்ரான்ஸபிஆர்மர் வாயிலாக தீ பரவியிருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. தீ சாலை முழுக்க பரவியதில் வீதியில் சென்றுகொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி தீ அணைப்பு பிரிவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர் . உடனே ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ யை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் கட்டிடத்தில் சிக்கியிருந்த நான்கு பேரை உயிருடன் மீட்டுள்ளனர். தீ பரவ தொடங்கியதுமே இவர்கள் பக்கத்து கட்டிடத்திற்கு தாவியுள்ளனர். இவர்கள் நால்வரையும் தீயணைப்பு ஊழியர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். தீயணைப்பு ஊழியர்கள் முதலில் பக்கத்துக்கு கட்டிடத்தில் பரவியிருந்த தீயை அணைத்துள்ளனர் . பின்னர் கட்டிடத்தின் வெளியே பற்றியிருந்த தீயை அணைத்து ஏணி வாயிலாக முதல் மாடிக்கு சென்றனர். புகைக்கு நடுவிலும் சுவாச கருவிகள் அணிந்து முகத்தை மூடியபடி தீயை அணைக்க போராடியுள்ளனர். பின்னர் ஷட்டரை கருவி கொண்டு கத்தரித்து அந்த துவாரம் வழியாக கட்டிடத்திற்குள் தண்ணீர் பாய்ச்சியுள்ளனர். இதில் ஒரு தீயணைப்பு ஊழியருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது . முதல் மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்த பொது இவருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது . இவருக்கு உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுதுமாக அணைக்கப்பட்டது . மாரத்தஹள்ளி போலீசார் இந்த தீ விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர்.இதே போல் மல்லேஸ்வரம் மெயின் வீதியில் உள்ள ஒரு துணி கடையிலும் தீ பற்றியதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள துணிகள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. இந்த கடையில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீ அணைப்பு ஊழியர்கள் உடனே தீயை அணைத்துள்ளனர் .