பெங்களூருக்கு குட்பை சொல்லும் ஐடி ஊழியர்கள்? உண்மை என்ன?

பெங்களூர், மார்ச் 21- பெங்களூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனையால் ஐடி ஊழியர்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து செல்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தான் தண்ணீர் பிரச்சனை ஐடி ஊழியர்களை பாதித்துள்ளதா? இல்லையா? என்பது பற்றி அவர்களே ஒன் இந்தியா தமிழிடம் விளக்கமாக கூறியுள்ளனர்.
பெங்களூரில் பருவமழை என்பது போதிய அளவு பெய்யவில்லை. இது ஒருபுறம் இருக்க இப்போது வெயில் கொளுத்தி வருகிறது. கோடை துவங்குவதற்கு முன்பே வெயில் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நிலத்தடி நீர்மட்டம் என்பது மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
சுமார் 30 சதவீத போர்வெல்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் டேங்கர்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீரை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிடபிள்யூஎஸ்எஸ்பி எனும் பெங்களூர் மாநகர குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வினியோகம் செய்யப்படும் காவிரி நீரை குடிநீருக்கு பதில் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பல பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன. சில ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது பெங்களூரில் சில பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் வரும் நாட்களில் மழை இல்லாவிட்டால் பல இடங்களில் இந்த பிரச்சனை வரலாம். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் சில ஐடி ஊழியர்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி அவர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம்’ ஆப்ஷனை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.இதுபற்றி பெங்களூரில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வருவோரிடம் ஒன் இந்தியா தமிழ் கருத்து கேட்டது. அதற்கு பலரும் பெங்களூரில் தண்ணீர் பிரச்சனை என்பது தொடங்கி உள்ளது என தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மேட்ரிமோனி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், பெங்களூரில் கட்டாயம் நீர் சேகரிப்பை அதிகரிக்க வேண்டும். நீர் பயன்பாட்டை குறைக்க வேண்டும். மேலும் தண்ணீர் மறுசுழற்சி செய்ய வேண்டும். நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசும் உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.