பெங்களூருவில் பல இடங்களில் குண்டு வெடிக்கும் – முதல்வருக்கு மிரட்டல்

பெங்களூரு, மார்ச்.5-
பெங்களூரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று முதல்வர் சித்தராமையா உள்துறை அமைச்சர் பரமேஸ்வரர் பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூர் ஒயிட் பீல்டில் உள்ள ராமேஸ்வரம் ஓட்டலில் குண்டு வெடித்த பிறகு இந்த மின்னஞ்சல் மேற்கண்ட 3 பேருக்கும் வந்துள்ளது. 2.5 மில்லியன் டாலர் பணம் தரவில்லை என்றால் பெங்களூர் நகரில் குண்டுகள் வெடிக்கும் என்று இந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரில் பஸ் நிலையம் ரயில் நிலையம் கோவில் ஓட்டல் உள்ளிட்ட பொது இடங்களில் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை 2 ஆம் தேதி பிற்பகல் 2:48 மணிக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாஹித் கான் பெயரில் அந்த மின்னஞ்சல் வந்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்த வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்தை அடிப்படையாகக் கொண்ட என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தி ஷாஹித் கான் என்ற பெயரில் இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. கர்நாடக அரசு, முதல்வர், உள்துறை செயலாளர், கூடுதல் போலீஸ் கமிஷனர், நிர்வாக பிரிவு, டி.சி.பி., பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இந்த அஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலில் தற்போது ராமேஸ்வரம் ஹோட்டலில் வெடித்துள்ள வெடிகுண்டு வெறும் டிரைலர் தான் என்றும் 2.5 மில்லியன் டாலர் பணம் தராவிட்டால் பெங்களூர் நகரில் பொது இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் அனுப்பியது யார் இதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து சைபர் கிரீம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.