பெங்களூரு குண்டுவெடிப்பில் டைமர் பயன்படுத்தப்பட்டதா

பெங்களூரு: மார்ச்.2 பெங்களூருவில் ஒயிட் பீல்ட் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகத்தில் வெள்ளிக்கிழமை குண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை நிகழ்த்த குற்றவாளி டைமர் கருவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்த குறைந்த சக்தி கொண்ட வெடிகுண்டை டைமர் கொண்டு இயக்கியிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் டைமர் கருவியின் பகுதிகள் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்மப் பொருள் அடங்கிய பையை வைத்த நபரின் உருவம் தெளிவாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நபரை அடையாளம் கண்டு பிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்து சிதறியது. இதில் உணவக பணியாளர்கள் ஃபரூக் ஹூசேன் (26), திவிபான்சூ (25) ஆகிய இருவர் உட்பட 7 வாடிக்கையாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதில் 2 பேர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் என‌ தெரியவந்துள்ளது. மொத்தம் 10 பேர் காயமடைந்ததாக இன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஒயிட் ஃபீல்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
என்எஸ்ஜி ஆய்வு: இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை சம்பவ பகுதிக்கு தேசிய பாதுகாப்புப் படையினர் (NSG) வந்து ஆய்வு செய்து வருகின்றனர். ராமேஸ்வரம் கஃபே சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சந்தேகத்துக்குரிய பொருட்கள் இருக்கின்றனவா என சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொழில் போட்டி காரணமா? இதற்கிடையே குண்டு வெடிப்பு நடந்த உணவகத்தின் உரிமையாளர் சில ஊடங்களுக்கு அளித்தப் பேட்டியில் தனக்கு தொழில் போட்டியாளர்கள் நிறைய உண்டு எனக் கூறியுள்ளார். எனவே போலீஸார் இந்த குண்டுவெடிப்பு அச்சத்தை ஏற்படுத்த தொழில் போட்டி காரணமாக நிகழ்த்தப்பட்டதாக என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.