பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.65 லட்சம் தங்கம் சிக்கியது

தேவனஹள்ளி, மார்ச் 10-பெங்களூரு புறநகர் தேவனஹள்ளி பகுதியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து பலரும் தங்கம், போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர். அவ்வாறு வருபவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக பிடித்து கைது செய்கின்றனர். இந்த நிலையில் பக்ரைனில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பக்ரைனில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் வயிற்றுக்குள் மறைத்து தங்கத்தை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பேஸ்ட் வடிவிலான 1¼ கிலோ தங்கத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.65 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். கைதானவர் குறித்து தகவல் கொடுக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.