பெங்களூர் நடைபாதைகளில் இன்னும்அகற்றப்படாமல் உள்ள மின் கம்பிகள்

பெங்களூரு, நவ. 24: சாலையோர நடைப்பாதைகளில் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
பெங்களூரின் சாலையோரங்களில் உள்ள‌நடைபாதைகளில் மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் காட்சியை அவ்வப்போது காண முடிகிறது. இதனால் நடைபாதைகளில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.
நடைபாதை வியாபாரிகள், கேபிள்கள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இந்த வழித்தடத்தை அடைத்துக் கொண்டுள்ளன‌. இதனால் பல நேரங்களில் ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. அண்மையில் காடுகோடியில் உள்ள சாலையோர நடைபாதையில் மின் கம்பி அறுந்து விழுந்து தாயும், குழந்தையும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுபோன்ற விபத்துகள் நடக்கும் போது, பிபிஎம்பி, பெஸ்காம் உள்ளிட்டவை அந்த நேரத்திற்கு மட்டும் அதனை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு, பின்னர் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. நடைபாதையில் நடக்க முடியாத நிலை ஏற்பட்டாலும் அது குறித்த நடவடிக்கை எடுப்பதில்லை. பொதுமக்களின் ஆயிரக்கணக்கான புகார்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகும் நடைபாதைகள் நடப்பதற்கு பாதுகாப்பாக இல்லை.


பரபரப்பான நடைபாதைகளுக்கு எட்டக்கூடிய தூரத்தில் மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பிகள் உள்ளன. இதனை சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு, உடனடியாக சீர் செய்யவில்லை என்றால், நடை பாதைகளில் பொதுமக்கள் பல்வேறு விபத்துகளை சந்திக்க நேரிடுவதை தடுக்க முடியாது.