பெங்களூர் பஸ்களில் குரல் அறிவிப்பு நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு, டிச. 21: பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் (பிஎம்டிசி) ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் பொது முகவரி, குரல் அறிவிப்பு அமைப்புகளை அதன் முழுப் பேருந்துகளிலும் பயன்படுத்த வேண்டும் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி பிரசன்னா பி வரலே மற்றும் நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் தலைமையிலான அமர்வு, சமூக காரணத்திற்காக ஷ்ரேயாஸ் குளோபல் டிரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் வழக்கறிஞரும் பார்வையற்ற நபருமான ஸ்ரேயாஸ் தாக்கல் செய்த பொது நல வழக்கு (பிஐஎல்) மீதான விசாரணையில் இந்த உத்தரவை பிறப்பித்தது.
சிலவற்றில் ஆடியோ அறிவிப்புகள் கிடைத்தாலும், பெரும்பாலான மாநகர பேருந்துகளில் முகவரி, குரல் அறிவிப்பு வசதிகள் இல்லை என்று பெங்களூருவாசியான ஸ்ரேயாஸ் வழக்கு தாக்கல் செய்தார்.விசாரணையின் போது, பிஎம்டிசி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரவிருக்கும் நிறுத்தங்களை மக்களுக்கு தெரிவிக்க 58 சதவீத பேருந்துகளில் குரல் அறிவிப்புகள் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், 2,562 வாகனங்களில் அந்த வசதி இல்லை என்றும் தெரிவித்தார்.
இவற்றில், அடுத்த 6 மாதங்களில் 1,141 பேருந்துகளை கட்டம், கட்டமாக நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக 921 எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்த கழகம் திட்டமிட்டுள்ளது, அதில் குரல் அறிவிப்பு வசதி இருக்கும்.“அதன்படி, 2024 ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பேருந்துகளில் நிறுவப்பட்ட குரல் அறிவிப்பு கொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான மேற்கொண்டு நடவடிக்கையை முடிக்க பிடிஎம்சியை அனுமதிக்கிறோம். 2024 ஏப்ரல் 18 தேதியன்று இணக்க அறிக்கையை தாக்கல் செய்ய பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவிற்கு இந்த நீதிமன்றம் காரணமும், கால அவகாசம் வழங்கப்படாது என்பதை நாங்கள் மேலும் தெளிவுபடுத்துகிறோம்” என்று உயர் நீதிமன்ற அமர்வு தெரிவித்தது