கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்


பெங்களூர், மே 4-
சாம்ராஜ் நகர் மாவட்ட மருத்துவமனைகளில் 24 பேர்
உயிரிழந்த சம்பவத்துக்கு, கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகியோர் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
சித்தராமையா:
இதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில்,
கர்நாடக மாநில அரசின் தோல்வியால் 24 உயிர்கள் பலியானது. இந்த சம்பவத்துக்கு முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர், சாம்ராஜ்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ் குமார் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும்.
மாவட்ட பொறுப்பு அமைச்சர் சுரேஷ்குமார் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார்.
குமாரசாமி:
முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறுகையில்,
மக்களின் உயிருடன் கர்நாடக அரசு விளையாடுகிறது. அமைச்சர்கள் யாரும் தங்கள் கடமையைச் செய்யவில்லை. முதல்வர் எடியூரப்பா கூட்டம் நடத்தி, நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவையான வசதிகள் செய்து உள்ளதாக கூறுகிறார். அதுபோன்று வசதிகள் செய்திருந்தால், சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் துயர சம்பவம் நடந்திருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
டி.கே‌சிவகுமார்:
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கூறுகையில், ஆக்சிஜன் இல்லாமல் இருந்த சம்பவத்துக்கு யார் பொறுப்பு?
ஆக்சிஜன் வழங்கவும் அரசால் முடியவில்லை. பிஜேபி தலைவர்களுக்கு பிரச்சாரம் முக்கியமே தவிர, மனித உயிர்கள் முக்கியமல்ல. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது என கூறியும் அரசு பொருட்படுத்தவில்லை.
நடந்த சம்பவத்துக்கு அரசு அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என்று தெரிவித்தார்.