பெங்களூர் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் காலி

பெங்களூரு, ஜூன் 11- திடீரென நகரில் குறைந்துவிட்ட கொரோனா இறப்புகளால் நகரின் மருத்துவமணிகளில் அரசு கோட்டாவில் உள்ள ஐசியு படுக்கைகள் பலவும் தற்போது காலியாக உள்ளன. நகரில் செவ்வாய்க்கிழமை 44, புதன்கிழமை 50 மற்றும் நேற்று வியாழக்கிழமை 47 மரணங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. நேற்று மாலை நிலவரப்படி நகரில் 36 சதவிகித ஐசியு மற்றும் 23 சதவிகித வெண்டிலேட்டர்களுடன் கூடிய படுக்கைகள் காலியாக உள்ளன. கடந்த 11 நாட்களுக்கு முன்னர் இதுவே வெறும் 3.3 சதவிகித ஐ சி யு மற்றும் 1.5 சதவிகித வேர்ன்டிலேட்டர் படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன. நேற்று மாலை நகரில் உள்ள 574 ஐசியு படுக்கைகளில் 205 படுக்கைகள் காலியாகவும் 638 வென்டிலேட்டர் படுக்கைகளில் 145 படுக்கைகளும் காலியாக உள்ளன. தவிர மாகடிரோட்டில் உள்ள கொரோனாவால் இறந்தவர்களுக்கென தாவரகெரேவில் அமைக்கப்பட்ட மயானத்தில் புதன்கிழமை ஒரு உடலும் வரவில்லை. கொரோனா மரணங்கள் பெருமளவில் குறைந்துவிட்டதால் கடுமையான மற்றும் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய நோயாளிகள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. வீட்டில் தனிமையில் உள்ளவர்களையும் மாநகராட்சி அடிக்கடி தொலைபேசி வாயிலாக அவர்களின் நிலைமைகளை அறிந்து வருகிறது. . அப்படி வீட்டில் தனிமையில் இறப்பவர்கள் பற்றி 1918 அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் நோயாளிகள் அறிவுறுத்த பட்டுள்ளனர். தவிர நோயாளிகளுக்கு எளிதில் இன்சூரன்ஸ் கிடைப்பதிலும் மாநகராட்சி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படுக்கைகள் தட்டுப்பாட்டால் பலரும் இறக்க நேர்ந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று நிலைமை மிகவும் முன்னேறியுள்ளதாக மன்னராட்சி தெரிவிக்கின்றது.