பெங்களூர் மாவட்டத்தில் கனகபுராடி.கே.சிவகுமார் கருத்துக்கு குமாரசாமி எதிர்ப்பு

பெங்களூரு, அக். 25- பெங்களூரு மாவட்டத்தில் கனகபுரா இணைப்பது குறித்து துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சர்ச்சைக்குரிய‌ கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் மற்றும் மஜத‌ மாநிலத் தலைவர் எச்.டி.குமாரசாமியின் தேர்தல் களமான ராமநகர மாவட்டம் மீண்டும் அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது. தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கனகபுரா தொகுதி பெங்களூரு மாவட்டத்தில் சேர்க்கப்படும் என சிவக்குமார் கூறியிருப்பது அரசியல் ரீதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநகரில் இருந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, எம்.பி, எம்.எல்.ஏ மற்றும் பெங்களூரு ஊரகத் தொகுதி முதல்வராக உயர்ந்து வெற்றி பெற்ற எச்.டி.குமாரசாமி, ராமநகரமும், சென்னப்பட்டினாவும் தனது இரு கண்கள் போன்றது என்று தெரிவித்தார். ராமநகரை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், தற்போது சென்னப்பட்டினத்தின் எம்எல்ஏவாக உள்ளார்.
2007ல் முதல்வராக இருந்தபோது 4 தாலுக்காக்களை சேர்த்து ராம்நகரை மாவட்டமாக அறிவித்தார். 2 செல்வாக்கு மிக்க தலைவர்களின் அரசியல் வாழ்க்கை இருவருக்குமிடையில் போட்டிக்கு களமாக அம்மாவட்டம் இருந்தது. கூட்டணி ஆட்சியில் மட்டும் தோளோடு தோள் நின்ற அவர்கள், அரசியல் ரீதியாக எப்போதும் போட்டியாளர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் சட்டமன்றத் தொகுதி மறுபகிர்ப்பின் போது, கனகபுரா சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்ட தொகுதியாக அமைக்கப்படும். இதனால், புதிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது’ என, அரசியல் வட்டாரத்திலும் அலசப்படுகிறது. ஒரு நாள் கனகபுரா பெங்களூரு மாவட்டத்துடன் இணைக்கப்படும்.
அப்போது நாங்கள் ராமநகரைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக பெங்களூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆகி விடுவோம் என்று துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கனகபுரா தாலுகா சிவனஹள்ளி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வீரபத்ரசுவாமி கோயில் திருப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
யாரோ பெயர் எடுப்பதற்காக ராம்நகரை மாவட்டமாக்கினார்கள். எங்களை மாவட்டத்தின் மூலையில் கொண்டுபோய் போட்டார்கள். ஆனால், நாம் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என மஜத‌ தலைவர் எச்.டி.குமாரசாமியின் பெயரை குறிப்பிடாமல் டி.கே.சிவகுமார் வசைபாடினர்.
பெங்களூரு மாவட்டத்தில் கனகபுரா சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு சிவக்குமார், நாங்கள் விரைவில் இதைச் செய்வோம். விஜயதசமி நாளில் கடவுள் முன்னிலையில் இதைச் சொல்கிறேன். விவசாயிகள் எக்காரணம் கொண்டும் பெங்களூருவாசிகளுக்கு தங்கள் நிலங்களை விற்கக் கூடாது. ஒரு நாள் இங்குள்ள கிராமங்கள் பெங்களூரு மாவட்டத்துடன் சேரும். அப்போது இங்குள்ள நிலத்தின் மதிப்பு பல லட்சத்திற்கு உயரும். அப்போது எனது சொல்லை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார். துணை முதல்வரின் இந்த பேச்சுக்கு மஜத தலைவர் எச்.டி.குமாரசாமி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.